என் மலர்
வழிபாடு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

- பக்தர்கள் சிவகோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. 12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 8-ம் நாளான நேற்று காலை நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி எழுந்தருளினார். மாலையில் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்தனர்.
சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.
சிகர நிகழ்ச்சியான மகாசிவராத்திரி தேரோட்டம் காலை 9 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவகோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு சுவாமி-அம்பாள் மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகின்றனர். நாளை (27-ந்தேதி) காலை இந்திர விமானத்தில் வீதி உலாவும், பிற்பகல், மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளு கின்றனர்.
28-ந்தேதி இரவு பிச்சாடனர் எழுந்தருளர் நிகழ்ச்சியும், 1-ந்தேதி சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாரதி, செயல் அலுவலர் சிவராம்குமார், உதவி ஆணையர் ரவீந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும்.