2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்: விஜய் தனித்து போட்டியிட முடிவு- சீமானுடன் கூட்டணி இல்லை என தகவல்
- 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
- கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே ஏற்பட தொடங்கி இருக்கிறது.
அந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும், நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகி வரும் நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான அணியும் களம் காண உள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கைகோர்க்க இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் கூட்டணி தொடர்பான இறுதி அறிவிப்புகள் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் முதல் தேர்தல் என்பதால் விஜய் தனித்தே களமிறங்க முடிவு செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது பலம் என்ன? என்பதை பார்த்து விட்டு அதன் பிறகு கூட்டணி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்றே விஜய் முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நல்ல நட்பில் இருக்கும் விஜய், கூட்டணி அமைக்கும் விஷயத்தில் போதிய ஆர்வம் காட்டாமல் நழுவி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை சதவீத ஓட்டுகளை பெறப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
எங்களோடு கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகள் இப்போதே ஆர்வம் காட்டி உள்ளன. எங்கள் கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.
அதே நேரத்தில் கூட்டணிக்கு யாரும் வராவிட்டாலும் எப்போதும் போல தனித்து களம் காணவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.
விஜயுடனான கூட்டணி பற்றி அவர் மேலும் கூறும்போது, தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் வீழ்த்துவதற்கு புதிதாக ஒரு அணி உருவானால் அதனுடன் விஜயும் கைகோர்த்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரது எண்ணமாகவும் உள்ளது. அதையே நாங்களும் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார். இருப்பினும் விஜய் எங்களோடு சேரப் போகிறாரா? இல்லையா? என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு என்றும் கூறினார்.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தனது ரசிகர் பட்டாளங்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவோடு களம் காண்பது உறுதியாகி இருப்பதால் தேர்தல் களம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜயின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
விஜய் தனித்து களம் காணும் பட்சத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பல முனை போட்டி நிலவி வாக்குகள் சிதறும் சூழல் உருவாகி உள்ளது. இது யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதிப்பாரா? என்பதும் புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.