தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை- வானதி சீனிவாசன்
- தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கம் முற்றிலுமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையில் தான் இருக்கிறது.
- கருத்து சொல்லும் பொழுது பொறுப்பற்ற வகையில் பதில் அளிப்பதே இங்குள்ள சட்டத்துறை அமைச்சர் மற்றும் பலருக்கும் வழக்கமாக உள்ளது.
நெல்லை:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார்.
பாளை வி.எம் சத்திரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றங்கள் ஒட்டு மொத்தமாக சமூகத்தில் நடக்கவே நடக்காது என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஆனால் ஒரு அரசாங்கம் குற்ற செயல்களை தடுப்பதற்கும், குற்ற செயல்கள் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி என்பது குறித்தும் உள்ள அரசின் நடவடிக்கையை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கம் முற்றிலுமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையில் தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நடைபெறக்கூடிய கொலைகள், நெல்லை மாவட்டத்தில் கூட காங்கிரஸ் தலைவர் ஒருவர் இறந்திருக்கிறார். அவர் எவ்வாறு இறந்தார் என்பது கூட இதுவரை தெரியவில்லை.
தமிழகத்தில் எப்போதும் பாதுகாப்பு இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு கூட இங்கு உத்திரவாதம் இல்லை. அதாவது கட்சியின் மேல் மட்டத்தில் உள்ள தலைவர்கள் உயிருக்கும் கூட பாதுகாப்புக்கு இல்லாத சூழ்நிலை தான் நிலவுகிறது.
இதுகுறித்து கருத்து சொல்லும் பொழுது பொறுப்பற்ற வகையில் பதில் அளிப்பதே இங்குள்ள சட்டத்துறை அமைச்சர் மற்றும் பலருக்கும் வழக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.