கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
- தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
- தற்பொழுது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கச்சத்தீவையொட்டிய இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்துவதும் என்று இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இனிமேலும் தாமதிக்காமல் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டும். தற்பொழுது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் பாதுகாப்புடன், அச்சமில்லாமல் தங்கள் தொழிலை மேற்கொள்ள, அமைதியான சூழ்நிலை நிலவ, உரிய முயற்சியை மேற்கொள்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.