தமிழ்நாடு

சென்னை-மன்னார்குடி இடையே வந்தே பாரத் ரெயில்... ரெயில்வே ஆய்வு செய்கிறது

Published On 2024-09-10 09:27 GMT   |   Update On 2024-09-10 09:27 GMT
  • சென்னையில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
  • மன்னார்குடிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்குவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூா் வழியாக மன்னார்குடிக்கு ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

'சென்னையில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வேளாங்கண்ணி, திருவாரூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக நகரங்களும், கடலூர் போன்ற வர்த்தக நகரங்களும் உள்ளன.

சென்னை அல்லது பெங்களூரில் இருந்து டெல்டா மாவட்டம் வழியாக மன்னார்குடி அல்லது புதுச்சேரிக்கு புதிய வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது' என ரெயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடிக்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க ஆய்வு மேற்கொண்டு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். சாத்தியக்கூறு தொடா்பான பல்வேறு அம்சங்களை ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து ரெயில்வே வாரியத்துக்கு அறிக்கை அளிப்பார்கள்.

அதன் அடிப்படையில் மன்னார்குடிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்குவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Similar News