தர்பூசணி விலை உயர்வு- கிலோ ரூ.120-க்கு விற்பனை
- தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துவரும் வேளையில், விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
- தர்பூசணி அளவில் சற்று பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு பழமும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது.
சென்னை:
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, சென்னையில் பல்வேறு இடங்களில் தர்பூசணிக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களாக நண்பகல் வேளைகளில் வெயில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்கள் தாகத்தைத் தணிக்க குறைந்த விலை பழமான தர்பூசணியை நாடத்தொடங்கி யுள்ளனர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் தர்பூசணி கடை வைத்திருக்கும் வியாபாரி கூறுகையில், "தர்பூசணி பழங்களின் விற்பனை மார்ச் - ஏப்ரல் மாதங்களில் விறுவிறுப்படையும். ஆனால், உடல் வெப்பத்தைக் குறைத்து, சீரான வெப்ப நிலையில் வைக்கிறது. மேலும், வைட்டமின் ஏ, சி இருப்பதால் உடல் சோர்வைப் போக்கக்கூடியதாக விளங்குகிறது.
தமிழகத்தில் சீர்காழி, சிதம்பரம், திண்டிவனம், திருவண்ணாமலை, வேலூர், ஆந்திர மாநிலம் சத்திய வேடு, நாகலாபுரம், மதனப்பள்ளி, சித்தூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வருகின்றன' என்றார்.
தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துவரும் வேளையில், விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு டன் தர்பூசணி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.15- க்கும், சில்லரை விற்பனையில் கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த முறை தர்பூசணி அளவில் சற்று பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு பழமும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது. எடைக்கு தகுந்தாற்போன்று, ஒரு பழத்தின் விலை ரூ.120 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.