எடப்பாடி பழனிசாமி முதல்வர், விஜய் துணை முதல்வர்- பிரசாந்த் கிஷோர் ஆலோசனை
- பிரசாந்த் கிஷோர் இது குறித்து அ.தி.மு.க.விடமும் பேசியதாகத் தெரிகிறது.
- விஜய்க்கு ஆந்திர மாநில அரசியலைக் பிரசாந்த் கிஷோர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வேலூர்:
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி வேகமாக காய் நகர்த்தி வருகிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.வும் தனக்கு எதிரிகள் என்று விஜய் அறிவித்துள்ளார்.
மேலும் தனது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக்கழக 2-ம் ஆண்டு விழாவில் விஜயை சந்தித்தார். அவர் விஜய்க்கு சில பரிந்துரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய் தனது அரசியல் எதிர்காலத்தை மனதில் கொண்டு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
விஜயை சந்தித்தபோது. நிரந்தர வாக்கு வங்கியைக் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே தி.மு.க. வெற்றியை தடுக்க முடியும் என்று பிரசாந்த் கிஷோர் விஜயிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் இதுகுறித்து அ.தி.மு.க.விடமும் பேசியதாகத் தெரிகிறது. தற்போது அ.தி.மு.க.வுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத வாக்குகள் உள்ளன.
த.வெ.க. அதிகபட்சமாக 20 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளையும் சேர்த்தால் மொத்த வாக்கு சதவீதம் 50 சதவீதமாக மாறும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்க்கு ஆந்திர மாநில அரசியலைக் பிரசாந்த் கிஷோர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், நடிகர் பவன் கல்யாணும் தங்கள் கூட்டணியால் வெற்றி பெற்றனர்.
அங்கு சந்திரபாபு நாயுடு முதல் முதல்-மந்திரியாகவும், நடிகர் பவன் கல்யாண் துணை முதல் முதல்-மந்திரியாகவும் உள்ளனர்.
அதே பாணியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், விஜய் துணை முதலமைச்சராகவும் உடன்பாடு ஏற்படுத்த பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்தக் கொள்கையை ஏற்க விஜய் இன்னும் தயங்குவதாகத் தெரிகிறது.
இருப்பினும் கூட்டணி இப்போதே உருவாக்கப்பட்டு விட்டதைப் போல த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
இதுகுறித்து சில த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல அரசியல் வியூக வல்லுநர்களுடன் விவாதித்து வருகின்றனர்.
கூட்டணியின் பொறுப்பு பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவர்களின் ஆலோசனைகளை நிச்சயமாக ஏற்றுக்கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.
2026-ம் ஆண்டில் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டாலும் அடுத்த தேர்தலில் தனது சொந்த ஆட்சி அமைக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவைப் பெறுவேன் என்று விஜய் தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக தேர்தல் நெருங்கும்போது பொது எதிரியை தோற்கடிக்க சில சமரசங்களை செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.