புளூ காய்ச்சல்: சென்னையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்பு
- வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது என்பதால் வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்தால் அனைவருக்கும் பரவி விடுகிறது.
- காய்ச்சல் மாத்திரை சாப்பிட்ட பிறகும் கடுமையான சோர்வு இருந்தால் எக்ஸ்ரே போன்ற பரிசோதனை செய்வது நல்லது.
சென்னை:
பருவ மழை காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு வழக்கமானதுதான். அக்டோபர் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி நவம்பரில் அதிகரித்த 'புளூ' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு டிசம்பரில் பெரு மளவில் பாதிப்பை ஏற்ப டுத்தி வருகிறது.
சளியில் தொடங்கி இருமல், தொண்டை வலி உடல் சோர்வு என படிப்படியாக பல்வேறு கஷ்டங்களை 'புளூ' வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி விடும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இத னால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வைரஸ் பாதிப்பு பெரியவர்களை விட சிறு குழந்தைகளை அதிகளவில் பாதித்துள்ளன. சென்னையில் காய்ச்சல் பாதிப்பு இல்லாத வீடே இல்லை என்ற நிலையில் புளூ காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது என்பதால் வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்தால் அனைவருக்கும் பரவி விடுகிறது. எல்லாருமே இருமல், தொண்டை வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பிரிவில் கூட்டம் அலைமோதுகிறது. காய்ச்சல் உபாதையால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கி செல்ல காத்து நின்றனர்.
இதே போல் தனியார் மருத்துவமனைகள், கிளி னிக்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் நள்ளிரவு வரை காத்து நின்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனியார் மருத்துவர்களிடமும், குழந்தைகள் டாக்டர்களிடமும் நோயாளி கள் கூட்டம் காத்திருப்பதை காண முடிகிறது.
இதுகுறித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி பொதுநல மருத்துவர் சந்திரசேகர் கூறியதாவது:-
புளூ வைரஸ் காய்ச்சல் 95 சதவீதம் மருந்து இல்லாமலே தானாகவே குணமாகி விடும். தற்போது பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வைரஸ் மழை-குளிர் காலத்தில் வரக்கூடியதுதான். இணை நோய் உள்ளவர்களுக்கு உடல் வலி, இருமல், தலைவலி போன்ற பாதிப்புகள் கடுமையாக இருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக புளூ வைரஸ் தொற்றி விடுகிறது.
'பாரசிட்டமால்' உள்ளிட்ட காய்ச்சல் மாத்திரை சாப்பிட்ட பிறகும் கடுமையான சோர்வு இருந்தால் எக்ஸ்ரே போன்ற பரிசோதனை செய்வது நல்லது.
காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தனிமைப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவது, சளியை கண்ட இடங்களில் துப்பாமல் பிளாஸ்டிக் கவரில் சேகரித்து அப்புறப்படுத்துவது, இருமல் வந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகத்தை கை விரல்களால் மூடுவது போன்றவற்ளை பின்பற்ற வேண்டும்.
புளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் போட வேண்டும். பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல் பாதிப்பு வராது. வந்தாலும் கூட தீவிரம் குறையும். வீசிங், ஆஸ்துமா உள்ளவர்கள் போட்டுக்கொண்டால் 95 சதவீதம் பாதுகாப்பாகும். இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும் போட்டுக் கொள்ளலாம்.
இந்த காய்ச்சல் பாதிப்பு 3 முதல் 5 நாட்களில் குணமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.