தமிழ்நாடு

வேலூரில் மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம்

Published On 2025-02-27 12:08 IST   |   Update On 2025-02-27 12:08:00 IST
  • கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வாங்கி உள்ளார்.
  • வேலூரில் 3 ஆண்டுகள் பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.

வேலூர்:

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, மாவோயிஸ்டு பண்ணைபுரம் கார்த்திக் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில், 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஓசூரில் நடந்த அதிரடி வேட்டையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திக்கின் கூட்டாளி சந்தோஷ்குமார் என்பவர் பிடிபட்டார். இவரிடம் விசாரித்ததில் வேலூரைச் சேர்ந்த மாவோயிஸ்டு ராகவேந்திரா (வயது 36) என்பவர் தலைவராக செயல்பட்டது தெரியவந்தது.

கேரளாவில் கைதான ராகவேந்திராவை காவலில் எடுத்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ராகவேந்திராவின் சொந்த ஊர் வேலுார் சத்துவாச்சாரி. இவரின் தந்தை வணிக வரித்துறையில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ராகவேந்திரா, பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்தார். தன் பெயரை வினோத்குமார், ரவிமுகேஷ் என மாற்றி, கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வாங்கி உள்ளார்.

கேரள மாநிலம், எடக்கரை வனப்பகுதியில், 20 மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு, ராகவேந்திரா தான் தலைமை தாங்கினார்.

இவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையின், தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளை, சிறப்பு மண்டலமாக அறிவித்து செயல்பட்டனர்.

கடந்த, 2015-ல், மாவோயிஸ்டு ரூபேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின், மாவோயிஸ்டுகளை வழிநடத்தும் பொறுப்பை, ராகவேந்திரா ஏற்றார்.

அதே ஆண்டு, கேரள மாநிலம், நிலம்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் ஆயுதப்பயிற்சி பெற்றனர். இதில், குப்பு தேவராஜ் என்பவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாலக்காடு மாவட்டம், மஞ்சக்கண்டியில், மாவோயிஸ்டு மணிவாசகம், ரேமா, பெரிய கார்த்திக், அரவிந்த் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

கடந்த, 2019-ல், வயநாடு பகுதியில் மாவோயிஸ்டு, 'கேடர் லீடர்' ஜலீல், 2020-ல் மற்றொரு கேடர் லீடர் வேல்முருகன், 'என்கவுண்டர்' செய்யப்பட்டனர்.

இதனால், ராகவேந்திரா தலைமையிலான மாவோயிஸ்டுகள், நிலை குலைந்தனர்.

அமைப்பை பலப்படுத்த, ராகவேந்திரா தலைமையில்பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர், தமிழகத்தில் வேலுாரிலும், கேரளாவில் கண்ணாரிலும் ரகசிய கூட்டங்கள் நடத்தினர். வேலூரில் 3 ஆண்டுகள் பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.

கடந்த 2021-ல் நிலம்பூரில் மீண்டும் ஆயுதப் பயிற்சி பெற முயன்றனர். அப்போது ராகவேந்திரா சிக்கினார். மேலும் சமீபத்தில் ஆற்காட்டை சேர்ந்த மாவோயிஸ்டு ஒருவர் பெங்களூரில் சரணடைந்தார்.

இதுகுறித்து தொடர்ந்து ராகவேந்திராவிடம் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News