பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு
- 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்.
- 15 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.7.5 லட்சம்.
தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிதி உதவியினை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.
அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.