பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
- இன்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 13-ந்தேதி பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.
இந்நிலையில் வெள்ள நீர் குறைந்த சில நாட்களிலேயே மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பழைய குற்றால அருவி பகுதியில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
விவசாய சங்கங்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் என பலரும் பழைய குற்றால அருவியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் அருவி கரையை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் மீண்டும் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சற்று குறைந்து சீராக விழுந்து வருவதால் அங்கும் காலை முதலே ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.