search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் தடை நீடிப்பு.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், தற்போதும் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் 2-வது நாளாக இன்றும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அருவிகளில் நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.
    • அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி ,பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு போலீ சார் தடைவித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், மழை காரணமாக இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

     விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

    நேற்று முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை.

    தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிப்பட்டது போல கட்டுபோட்டுக் கொண்டு பிராங்க் வீடியோ பதிவு செய்துள்ளார்.

    இந்த பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட செங்கோட்டையை சேர்ந்த பீர் முகம்மது, சேக் முகம்மது ஆகியோரை கைது செய்துள்ளனர்.

    மேலும், பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • திருமண பிளக்ஸ் போர்டு வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியில் நேற்று திருமண நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது காசி மேஜர் புரம் முத்துராமலிங்கனார் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பட்டுராஜ் (வயது 27) என்பவருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே திருமண பிளக்ஸ் போர்டு வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பட்டுராஜிக்கு மர்ம நபர்கள் போன் செய்து வெளியே அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டை விட்டு வெளியில் வந்த பட்டுராஜை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பட்டுராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதை தடுக்க சென்ற காசிமேஜர்புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகன் அருண் (21) என்பவருக்கும் கைகளில் சரமாரி வெட்டு விழுந்தது. இதில் அருண் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக அருணை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அருண் அனுப்பி வைக்கப்பட்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார், கொலை செய்யப்பட்டபட்டு ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றாலம் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பட்டுராஜிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 ½ வயதில் குழந்தை உள்ளனர்.

    • குற்றால அருவிகளிலும் நேற்று மாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
    • பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்தது.

    தென்காசி:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீரோடைகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்பட்டு வரும் குற்றால அருவிகளிலும் நேற்று மாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் நடைப் பகுதிகள் மற்றும் கார் பார்க்கிங் வரையில் தண்ணீர் வழிந்து ஓடியது.


    அதேபோன்று மெயின் அருவியிலும் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்தது. இதனால் கயிறுகளை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மாலை முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்து நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள், அய்யப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.

    மெயின் அருவியில் மட்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்து கொண்டிந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 250 கிராம் எடையுள்ள கஞ்சா அல்வா மற்றும் கஞ்சா, அரிவாள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் பகுதிக்கு மேற்கே உள்ள கருவாட்டு பாறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி ஆகியோரின் ஆலோசனையின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்வகணேசன், தனிப்பிரிவு மகேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ரகசிய சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கருவாட்டு பாறை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் நெல்லை மாவட்டம் தேவர்குளம் சுப்பையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் ஈஸ்வர மூர்த்தி (வயது 21) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் எடையுள்ள கஞ்சா அல்வா மற்றும் கஞ்சா, அரிவாள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து விற்றுள்ளதும், போலீசில் சிக்காமல் இருக்க அல்வாவிற்குள் கஞ்சாவை வைத்து பல நாட்களாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    • குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்து சீராக கொட்டி வருகிறது.
    • ஐந்தருவியின் ஐந்து கிளைகளில் தண்ணீர் விழுந்து வந்த நிலையில் தற்போது 3 கிளைகளில் மட்டுமே அதிகம் தண்ணீர் விழுந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு சீராவதுமாக தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான அளவில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்து சீராக கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவியில் காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஐந்தருவியின் ஐந்து கிளைகளில் தண்ணீர் விழுந்து வந்த நிலையில் தற்போது 3 கிளைகளில் மட்டுமே அதிகம் தண்ணீர் விழுந்து வருகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் சீராக விழுவதால் விடுமுறை தினத்தை கழிப்பதற்கு குற்றால அருவிகளை நோக்கி சுற்றுலா பயணிகள் காலை முதலே அதிக அளவில் வருகை தந்துள்ளனர்.

    • உறவினர் ஒருவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
    • தென்காசி மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை உலக்கூட தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் உமாசங்கர்(வயது 30). இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் குழந்தை உள்ளது.

    உமாசங்கர் சவுதி அரேபியாவில் கடந்த 1 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று அங்கு அவர் தனது உறவினர் ஒருவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கதறி துடித்தனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு உதவி செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    • அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½அடி உயர்ந்து 59 அடியை எட்டியது.
    • பாசனத்திற்காக வினாடிக்கு 1148 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 84 அடி கொள்ளவு கொண்ட ராமநதி அணை மற்றும் 85 அடி கொண்ட கடனா அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றும் ராமநதி அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½அடி உயர்ந்து 59 அடியை எட்டியது. கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அந்த அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை பகுதியில் மழை எதுவும் பதிவாகவில்லை. அந்த அணையில் 48.23 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாவட்டத்தில் தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.

    ஆய்குடியில் பிற்பகலில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு 17 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. இரவு முழுவதும் தொடர் நீர்வரத்தால் தடை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மழை குறைவால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கழுகுமலை, கடம்பூர், கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணிக்கணக்கில் கனமழை கொட்டியது. விளாத்திகுளத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது.

    அந்த பகுதிகளில் உள்ள குளங்களுக்கும் நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கழுகுமலை, விளாத்திகுளம் மற்றும் கடம்பூரில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.

    திருச்செந்தூர், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றன. திருச்செந்தூரில் 24 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கோவில்பட்டி, எட்டயபுரம், வைப்பாறு, சூரன்குடி, காடல்குடி, வேடநத்தம் பகுதிகளிலும் பெய்த மழையால் பூமி குளர்ச்சியானது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஓட்டப்பிடாரம், மணியாச்சி ஆகிய இடங்களில் லேசான சாரல் அடித்தது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்வதால், நெல், பயிறு வகைகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு 29 மில்லிமீட்டர் மழை பெய்தது. கொடுமுடியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 28 மில்லிமீட்டரும், நம்பியாறில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. புறநகர் பகுதிகளில் மழை பெரிதாக பெய்யவில்லை. மாநகர் பகுதியில் மட்டும் சில மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை பிசான பருவ நெல் சாகுபடி பணிக்காக பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    அந்த அணை நீர்மட்டம் நேற்று 93.50 அடியாக இருந்த நிலையில் தற்போது 92.80 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1148 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    • என்னை குணமாக்குவதாக கூறி ஆஸ்பத்திரிக்கும், கோவிலுக்கும் அடிக்கடி அழைத்து சென்றார்.
    • ஆனாலும் என்னால் மதுகுடிக்காமல் இருக்க முடியவில்லை.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கருவந்தா உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 42). கட்டிட தொழிலாளி.

    இவருக்கும், கீழசுரண்டையை சேர்ந்த சிவனம்மாள் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படவே ஆத்திரம் அடைந்த சுரேஷ் அரிவாளால் சிவனம்மாளை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றார்.

    இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சுரேஷ் சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் தினமும் சண்டையிட்டு வந்ததால் அவரை நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    நேற்று மீண்டும் கணவன்-மனைவி 2 பேரும் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தைகள் வெளியில் விளையாட சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த சிவனம்மாளை அரிவாளால் சுரேஷ் வெட்டிக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து இரவோடு இரவாக போலீசார் சுரேசை கைது செய்தனர்.

    நான் மதுகுடித்துவிட்டு வந்தது பிடிக்காமல் எனது மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தேன். ஆனாலும் என்னால் மதுகுடிக்காமல் இருக்க முடியவில்லை.

    ஆனால் எனது மனைவி என்னை அடிக்கடி திட்டிக் கொண்டே இருந்தார். என்னை குணமாக்குவதாக கூறி ஆஸ்பத்திரிக்கும், கோவிலுக்கும் அடிக்கடி அழைத்து சென்றார். இது எனக்கு பிடிக்கவில்லை.

    நேற்று ஆஸ்பத்திரிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து என்னை திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை வெட்டிக் கொன்றேன். அதேநேரம் மனைவியை கொலை செய்துவிட்டோமே என்று வருந்திய நான் மெயின்ரோட்டிற்கு அரிவாளுடன் ஓடினேன். அப்போது அங்கு வந்த பஸ்சில் விழுந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அது நடக்கவில்லை.

    தொடர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் விழ முடிவு செய்து எனது லுங்கியில் பெரிய கல்லை கட்டிக்கொண்டு விழுந்தேன். ஆனால் அதிலும் தப்பித்துவிட்டேன். கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த என்னை போலீசார் பிடித்து வந்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தண்டவாளத்தின் நடுவே 10 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் தினமும் மாலை 6.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படுகிறது. பின்னர் கடையநல்லூர், பாம்புகோவில், ஸ்ரீவில்லி புத்தூர் வழியாக சென்னைக்கு சென்றடைகிறது.

    நேற்று மாலை வழக்கம்போல் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. 6.50 மணிக்கு கடையநல்லூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது.

    இந்த ரெயில் கடையநல்லூர்-பாம்புகோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே போகநல்லூர் பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.

    இதனைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்கியவாறு அதனை நிறுத்தினார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினர். பின்னர் மீண்டும் அங்கிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.

    ஏற்கனவே கடந்த மாதமும் சங்கனாப்பேரி பகுதியில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பதற்காக அவர்கள் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தது தெரிய வந்தது.

    கடந்த ஒரு மாதமாக ரெயில்வே போலீசார் கடையநல்லூரில் இருந்து பாம்பு கோவில் சந்தை வரை தண்டவாளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு சென்றனர். இந்த நிலையில் தான் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    எனவே தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×