என் மலர்
தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. புரட்சியை ஏற்படுத்தும்- அண்ணாமலை

- தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது.
- தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது.
புளியங்குடி:
தென்காசி மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் புளியங்குடியில், தீய சக்தியை வேரறுப்போம் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-
தென்காசி மாவட்டம் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி, வாஞ்சிநாதன், பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.
தேசியவாதிகள் நிறைந்த மண் தென்காசி மண். தற்போது இந்த மாவட்டத்தில் கனிம கொள்ளை நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கல்வித்தரம் அதல பாதாளத்தில் உள்ளது. கண்ணியமான ஆசிரியர்கள் வாழ்ந்த பூமி இது. ஆனால் இந்த ஆட்சியில் தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.
மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.
கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி கூட இயங்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது நவோதயா பள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும். அந்த பள்ளிகளுக்கு கர்மவீரர் காமராஜர் பெயர் சூட்டப்படும். மாவட்டம் தோறும் 2 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
புளியங்குடியில் முக்கியமான விவசாயப் பயிரான எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி பெருகி விவசாயம் மேம்படும்.
தென்காசி மாவட்டத்தில் கனிம வளம் தொடர்ந்து களவாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் சூழலில் நீர் மேலாண்மைக்கும், விவசாயத்திற்கும், கல்விக்கும், தொழில் முனைவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமும் நடைபெறும்.
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது தமிழக பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.2,500 வழங்கப்படும்.
2026 தேர்தல் அல்ல. அது ஒரு புரட்சி. தலை குனிந்த தமிழகத்தை மீண்டும் தலை நிமிர செய்யப்போகும் கட்சி பா.ஜ.க. 2026 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கட்சி புரட்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.