என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை: குற்றாலத்தில் 2-வது நாளாக குளிக்க தடை

- நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
- தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் குளிக்க அனுமதி.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் இன்று காலை வரை பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நேற்று மாலையில் மட்டும் புலி அருவியில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு தொடர்ந்து பெய்த மழையினால் மீண்டும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புலி அருவியிலும் இன்று காலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது
அதாவது, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகமாக காணப்பட்டு வருவதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை குறைந்து தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.