உணவு பரிமாறாமல் செல்போனில் மூழ்கிய மனைவி படுகொலை- தொழிலாளி வெறிச்செயல்
- ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
- கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகாவை அடுத்த அம்பிளிகொளா பகுதியை சேர்ந்தவர் மனு. இவரது மனைவி கவுரம்மா (வயது 28). கவுரம்மா சிகாரிப்புராவில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மனு அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை மனு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மனைவியிடம் உணவு பரிமாறும்படி கேட்டுள்ளார்.
ஆனால் கவுரம்மா நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையே ஒரு கட்டத்தில் நீங்களே உணவு பரிமாறி சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று கவுரம்மா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் கடும் கோபமடைந்த மனு, மனைவியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதில் கவுரம்மா மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மனு, மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகள் எனக்கு உணவு பரிமாறாமல் செல்போனில் மூழ்கி இருந்தார். இதனால் ஆத்திரத்தில் கவுரம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து கவுரம்மாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பி ஓடிய மனுவை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மனுவை நேற்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிகாரிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.