உலகம்

மசூதிக்கு அருகே குண்டு வெடிப்பு; 52 பேர் பலி: பாகிஸ்தானில் பயங்கரம்

Published On 2023-09-29 10:43 GMT   |   Update On 2023-09-29 11:15 GMT
  • மக்கள் மிலாடி நபி கொண்டாட்டத்திற்காக ஊர்வலமாக செல்ல கூடியிருந்தனர்
  • குண்டு வெடிப்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பலியானார்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ளது பலுசிஸ்தான் பிராந்தியம். இதற்கு வடமேற்கே உள்ளது மஸ்டங் மாவட்டம்.

இன்று, உலகெங்கும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிலாது நபி பண்டிகை என்பதால் இங்குள்ள மதினா மசூதிக்கு அருகே இப்பண்டிகையை கொண்டாடவும், பிறகு ஒரு ஊர்வலமாக செல்லவும் மக்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் 52 பேர் கொல்லப்பட்டனர்; 130 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் அங்கு காவல்துறை பணியின் காரணமாக வந்திருந்த மஸ்டங் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் பலியானார். கஷ்கோரியின் காருக்கு அருகே அந்த தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றதாக நகர காவல்துறை அதிகாரி மொஹம்மத் ஜாவெத் லெஹ்ரி தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவரகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயமடைந்துள்ளவர்கள் க்வெட்டா (Quetta) பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பலுசிஸ்தான் மாநிலத்தின் இடைக்கால செய்தித்துறை அமைச்சர ஜன் அசக்சாய், "மத சகிப்புதன்மையையும் அமைதியையும் அன்னிய நாட்டு சக்திகளின் உதவியுடன் அழிக்க எதிரிகள் நினைக்கின்றனர். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் முக்கிய அரசியல் தலைவர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News