உலகம்

அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்த ஹவுதி: மோசமடையும் மத்திய கிழக்கு கடல் மோதல்

Published On 2024-01-27 07:33 GMT   |   Update On 2024-01-27 07:34 GMT
  • செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
  • தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றிணைந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளையில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற இங்கிலாந்தை சேர்ந்த எண்ணை கப்பல் மீதும் ஏவுகணைகளை வீசி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இங்கிலாந்தின் மார்லின் லுவாண்டா கப்பல், செங்கடலை கடந்து ஏமன் வளைகுடாவில் சென்றபோது ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலில் தீப்பிடித்தது. அதை கப்பல் ஊழியர்கள் போராடி அணைத்தனர்.

இதுகுறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறும்போது அமெரிக்கா, இங்கிலாந்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றனர்.

மத்திய கிழக்கு பகுதி கடலில் தொடர்ந்து வணிக கப்பல்களை தொந்தரவு செய்து வரும் ஹவுதி கிளார்ச்சியாளர்கள் தற்போது அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கடந்த சில தசாப்தங்களில் மிகப்பெரிய மோதலாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்று அதிகாலை செங்கடலை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக வைத்திருந்த ஹவுதி கப்பல் எதிர்ப்பு ஏவுகணைக்கு எதிராக அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹவுதியின் அல்-மசிராஹ் செயற்கைக்கோள் செய்தி சேனல், துறைமுக நகரான ஹொடெய்டா அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதன்முறையாக அமெரிக்காவின் போர்க்கப்பலை குறிவைத்துள்ளது.

Tags:    

Similar News