search icon
என் மலர்tooltip icon

    ஏமன்

    • செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தனர்
    • கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடந்துள்ளது

    பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானிலும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை எதிர்த்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.

    செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் தரப்பில் இருந்து கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கடலில் வந்த பிரிட்டன் எணணெய் கப்பல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.

    கார்டெலியா மூன் [Cordelia Moon] எனப்படும் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகை மோதவைத்து ஹவுதிக்கள் வெடிக்கச்செய்துள்ளனர். ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹுதைதா [Hodeidah] வில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    மேலும் கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ள ஹவுதிக்கள் கப்பல் தீப்பற்றி எரியும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    • பாலஸ்தீன போரை எதிர்த்து ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்
    • எந்த இடமும் எங்களுக்குத் தூரமில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் சூளுரைத்துள்ளார்.

    லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஒரு வார காலமாக மிகப்பெரிய அளவிலான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. லெபனான் முழுவதும் பரவியுள்ள ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள் வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் வெடித்துச் சிதறியதால் 35 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது. 4000 பேர் வரை படுகாயமடைந்தனர். தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் பெண்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா உயர் கமாண்டர்கள் பலரும் கொல்லப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் உள்ளிட்ட இடங்கள் மீது நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.

    பாலஸ்தீன போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகச் லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாவை போல ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறனர். எனவே தற்போது ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

    ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம், எண்ணெய் சேமிப்பு கிடங்குகளைக் குறிவைத்து 1,800 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் எந்த இடமும் எங்களுக்குத் தூரமில்லை. எங்களைச் சீண்டுபவர்களை நாங்கள் அழித்தொழிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட்[Yoav Gallant] சூளுரைத்துள்ளார்.

    • சரக்குகளை கையாளும் முக்கிய போக்குவரத்து பாதையாக செங்கடல் உள்ளது.
    • 10 லட்சம் பேரல்களுடன் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் கப்பல்களை ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    அந்த வகையில் கடந்த 21-ந்தேதி சௌனியான் என்ற சரக்கு கப்பல் மீது சிறிய வகை ஆயுதம் மற்றும் டிரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் லேசான காயம் அடைந்தது.

    இதற்கிடையே கப்பலில் இருந்த ஊழியர்களை பிரான்ஸ் படைகள் காப்பாற்றியது. இதனால் கப்பல் கைவிடப்பட்டது. செங்கடலில் தனியாக நின்ற கப்பலில் ஹமாஸ் அமைப்பினர் இறங்கு துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தினர். மேலும் கச்சா எண்ணெய் பேரல்கள் இருக்கும் டேங்கர்களை குண்டு வைத்து தாக்கினர். சுமார் ஆறு இடங்களில் குண்டு வைத்து தகர்த்தனர். இது தொடர்பான வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

    அந்த கப்பலில் ஒரு மில்லியன் (10 லட்சம்) கச்சா எண்ணெய் பேரல்கள் இருக்கிறது. இந்த எண்ணெய் உடன் கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கடலில் கச்சா எண்ணெய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    செங்கடல் வழியாக ஆண்டிற்கு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. முக்கியமாக ஐரோப்பிய உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்வதற்கு இந்த வழித்தடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    • ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்'

    இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நேற்று முன் தினம் அதிகாலை 3.15 மணியளவில் வான்வழியாக நடந்த டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.

    காசா போர் தீவிரமாகி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் அதிபர் நேதனயாகு இந்த வாரம் சந்திக்க உள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நடந்த இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் நாட்டின் ஹோதைதா [Hodeida] நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹவுதிக்களின் முக்கிய தளவாடங்களுள் ஒன்றான ஏமானி துறைமுகம் மீது இஸ்ரேலிய போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 89 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த பதிலடி தாக்குதல் குறித்து பேசியுள்ள இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதனயாகு, 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எங்களின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த துணிந்தால் ஹவுதிக்கள் மீது இதுபோன்ற பல தாக்குதலைகளை இஸ்ரேல் நடத்தும். தற்போது ஹோதைதாவில் எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

    • அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

    ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது. அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் தெரிவித்தனர்.

     

     இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

     

    • கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது.
    • சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஏமன்:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் படையினர் 7 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கினார்கள்.

    மேலும் அரபிக்கடல் பகுதியிலும் அமெரிக்க நாட்டு கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
    • ஒரு கப்பலை சிறைப்பிடித்த நிலையில், ஒரு கப்பலை மூழ்கடித்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமன் நாட்டியில் செயல்பட்டு வரும் ஹவுதி குழு செயல்பட்டு வருகிறது.

    இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஹவுதி குழுவினருக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் ஏவுகணைகள் மூலம் ஹவுதி தனது தாக்குலை தொடர்கிறது.

    அப்படித்தான் கீரிஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பல் சேதமாகி, தண்ணீர் கப்பலுக்குள் சென்றது. ஆனால், கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை.

    இந்த நிலையில் லாக்ஸ் என்ற தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஈரானுக்கு தானியங்கள் ஏற்றி சென்றது எனத் தெரியவந்துள்ளது. கப்பல் முழுவதும் தானியங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஹவுதி குழுவுக்கு ஈரான்தான் முழு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆதரவு அளித்த நாட்டிற்கு தானியங்கள் கொண்டு சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. மற்றொரு கப்பலை மூழ்கடித்தது.

    நேற்று ஏமன் மீது பறந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க விமானப்படை டிரோன் ஏதும் மாயமாகவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துகிறது ஹவுதி.
    • ஹவுதி தாக்குதலை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து முறியடித்து வருகின்றன.

    செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல்களை குறிவைத்து தாக்குகிறது.

    இதனை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செங்கடலில் ஹவுதி கிளர்ச்சி குழு தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஒரு டிரோன் செங்கடலில் பறந்து சென்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்றொரு டிரோன் தாக்குதலுக்கு புறப்பட தயாராக இருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்கா, "எங்களுடைய படைகளை பாதுகாக்கவும், கடற்பயணம் சுதந்திரமாக மேற்கொள்ளவும், சர்வதேச கடற்பகுதி பாதுகாப்பானது என்பதை உருவாக்கவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அதிகபட்ச பாதுகாப்பிற்காகவும் தேவையான நடவடிக்கை" எனத் தெரிவித்துள்ளது.

    ஏமனின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருக்கின்றன. மேலும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகின்றன.

    • சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.
    • கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஏடன்:

    ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டுக்குச் சொந்தமான அல் கம்பார் 786 என்ற மீன்பிடிக்கப்பலை நேற்று முன்தினம் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரையும் பணய கைதிகளாகப் பிடித்தனர்.

    கப்பல் கடத்தப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததும் அரபிக்கடலில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் உடனடியாக அங்கு விரைந்தன. கடத்தப்பட்ட ஈரான் கப்பலை இந்திய கடற்படையின் கப்பல் நேற்று சுற்றிவளைத்தன. ஈரான் கப்பலில் பயங்கர ஆயுதங்களுடன் 9 கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்தும் கப்பலையும், பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளையும் மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர். கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிரடி நடவடிக்கை எடுத்து 23 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

    • இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளின் சரக்கு கப்பல்கள் குறிவைக்கப்படும்- ஹவுதி
    • அமெரிக்கா- இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதிக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளில் சரக்கு கப்பல்களை செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஈரான் ஆதரவுடன் ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    சரக்கு கப்பலை நோக்கி அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் கூட்டாக பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் லைபீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பார்படோஸ் கொடியுடன் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    இதில் மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கப்பலை அங்கேயே விட்டுவிட்டு பணியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

    மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் சம்பவம், அதேவேளையில் சர்வதேச கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பொறுப்பற்ற முறையிலான தாக்குதல் என ஏமனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களில் ஐந்து ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதோடு சேர்த்து இரண்டு ஏவுகணைகள் சரக்கு கப்பல்களை தாக்கியுள்ளன. மூன்றில் ஒரு ஏவகணையை அமெரிக்க கப்பல் தாக்கி அழித்துள்ளது.

    • கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
    • முதன்முறையாக ஊழியர்கள் கப்பலை விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியார்கள் செங்கடலில் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருந்த போதிலும் நேற்று செங்கடலில் வந்து கொண்டிருந்த ஒரு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளனர். இதனால் கப்பலில் இருந்து ஊழியர்கள் வெளியேறிய நிலையில், அந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய அமெரிக்கா நாடான  பெலீஸ் நாட்டின் கொடியுடன் ரூபிமார் கப்பல் சென்று கொண்டிருந்த போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிய வகை வணிக கப்பலான ரூபிமாரில் இருந்த பணியாளர்கள் உடனடியான பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போர்க்கப்பல் மற்றும் வணிக கப்பலை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கப்பலில் இருந்து பணியாளர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கப்பல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள உரிமையாளரால் பதிவு ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஹவுதி செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அடையாளம் தெரியாக இங்கிலாந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கப்பல் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    • ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த அகமது அவாத் பின் முபாரக் புதிய பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சவுதி அரேபியாவுடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏமனின் ஆட்சிக்குழு பிரதமரை மாற்றியுள்ளது. ஆனால், நீக்கத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

    ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அகமது அவாத் பின் முபாரக்

    ஏமன் கடந்த 2014-ல் இருந்து உள்நாட்டு சண்டையில் சிக்கி தவித்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் உள்ளிட்ட இடங்களை பிடித்து. பின்னர் 2015-ல் சவுதி அரேபியா தலைமையிலான குழு ஏமன் நாட்டின் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சண்டையில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ×