புதுச்சேரி

விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி- புதுச்சேரியில் கம்யூ., விடுதலை சிறுத்தைகள் மறியல்

Published On 2024-06-12 07:45 GMT   |   Update On 2024-06-12 07:45 GMT
  • 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
  • பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் வெளியான விஷ வாயுவால் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

இறந்த 3 பெண்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உடல்கூராய்வு நடந்தது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி, இறந்த செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், சிறுமி செல்வராணி குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்த நிவாரண தொகை போதாது என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகரில் தரையில் அமர்ந்து கட்சி கொடிகளோடு கோஷம் எழுப்பி மறியல் செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள், 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டுக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.விழுப்புரத்திலிருந்து வந்த பஸ்கள் மூலக்குளம் வழியாக திரும்பிச்சென்றன. மறுபுறத்தில் இந்திராகாந்தி சிலை வரை பஸ்கள் செல்ல முடியாமல் நின்றது.

சுமார் அரைமணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தின்போது மூலக்குளம் வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சிற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் வழிவிட்டனர்.

நேற்று இரவில் பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் மறியல் போராட்டம் நடந்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News