null
45 கி.மீ.க்கு மேல் வேகமாக சென்றால் அபராதம்: புதுச்சேரி போலீசார் அதிரடி
- 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சாலை பாதுகாப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.
அப்போது விபத்தில் உயிரிழப்பை தடுப்பது, சாலை மேம்படுத்துதல், சிக்னல்களை சீரமைத்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக புதுவையில் ஹெல்மெட் அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சாலைகளில் செல்ல வேண்டிய வேககட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி முக்கிய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட (45கி.மீ.) அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரை, திண்டிவனம் சாலையில் ஜிப்மர் முதல் இந்திராகாந்தி சிலைவரை, கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் முதல் தவளக்குப்பம் வரை நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
முதல் கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் நவீன கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையும் இணைந்து அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உள்ளனர்.
எனவே இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அடுத்த கட்டமாக மேலும் பல முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.