புதுச்சேரி

நில மோசடி வழக்கு- தனியார் என்ஜீனியரிங் கல்லூரி பேராசிரியர் கைது

Published On 2022-07-30 08:05 GMT   |   Update On 2022-07-30 08:05 GMT
  • இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ராஜேந்திரனிடம் விற்றனர்.
  • நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர்.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் தி.ரு.வி.க. தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன், சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்துபோன நிலையில் ஆரோக்கியராஜ் மற்றும் குமரனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் தீதாம்பாளையம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த தனியார் என்ஜீனியரிங் கல்லூரி பேராசிரியரான அபிலாஷ் ராஜீவ் தரணை அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கடலூர் சில்வர் பீச்சில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News