search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கேரளாவில் கோவிலுக்குள் செல்ல நடிகை அமலா பாலுக்கு மறுப்பு- கோவில் நிர்வாகம் விளக்கம்
    X

    கேரளாவில் கோவிலுக்குள் செல்ல நடிகை அமலா பாலுக்கு மறுப்பு- கோவில் நிர்வாகம் விளக்கம்

    • மாற்று மதத்தவர் என்பதால் கேரளாவில் உள்ள மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்ய நடிகை அமலாபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு பார்ப்பது வருத்தம் அளிப்பதாக அமலாபால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இந்துக்களை தவிர மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இதுபோல கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


    இந்த நிலையில் நேற்று முன்தினம் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கேரளா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பாலும் நேற்று முன்தினம் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்து விட்டனர்.


    அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் மனம் வருந்திய நடிகை அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வருகை பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.


    அதில் திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இதனால் நான் கோவிலுக்கு வெளியே நின்றே சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும், என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


    நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் நிர்வாகிகள் கூறும்போது, இக்கோவிலில் இதுவரை கடைபிடித்து வந்த நடைமுறைப்படியே நடிகை அமலா பால் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இக்கோவிலுக்கு எராளமானோர் வருகிறார்கள். மாற்று மதத்தவரும் வரத்தான் செய்கிறார்கள். அவர்களை பற்றி வெளியே எதுவும் தெரியாததல் பிரச்சினை இல்லை. நடிகை அமலா பாலை எல்லோருக்கும் தெரியும். அவரை கோவிலுக்குள் அனுமதித்தால் கோவில் நடைமுறையை மீறியதாக சர்ச்சை ஏற்படும். எனவே அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை, என்றனர்.

    Next Story
    ×