என் மலர்
வழிபாடு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா: இன்று மயானக் கொள்ளை

- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
- தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியிலிருந்து 13-நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இரவு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
இன்று காலை மூலஸ்தானத்தில் உள்ளஅம்மனுக்கும், சிவபெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவ அம்மனுக்கு ஆங்கார அங்காளி அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு மயானத்தை நோக்கி அம்மன் புறப்பட்டு மயானத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை , காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை விழா ஆகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலக்குழு தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.