search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்: நாளை மயானக்கொள்ளை
    X

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்: நாளை மயானக்கொள்ளை

    • இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    • நாளை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று காலையில் கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மேலும் காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

    அதாவது சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி பார்வதிதேவி ஆங்கார உருவம் கொண்டு பிரம்மனின் தலையை மயானத்தில் மிதித்து சிவனுக்கு சாப விமோசனம் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மயானக் கொள்ளை விழா நடை பெறுகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் கோவில் சார்பில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக மயானத்துக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன் பின்னர் அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    நாளை இரவு வழக்கமாக அமாவாசை அன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி பெரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷே க் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×