என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
- கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டது.
- அரசு சார்பில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
இந்தியாவில் வணிகம் செய்ய இடங்களை தேடிய பிரெஞ்சு நாட்டினர் 1673-ம் ஆண்டு புதுச்சேரியில் காலூன்றினர். அந்த ஆண்டு, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தனது வணிகத்தையும் தொடங்கியது.
அதன்பின் 1721-ல் மாகியையும் கையகப்படுத்திய இவர்கள் அடுத்தடுத்து ஏனாமையும், காரைக்காலையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
இந்தியா முழுவதும் விடுதலைப் போராட்டங்கள் அதிகளவில் வெடித்ததால் 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை அளித்தனர். ஆனால், புதுச்சேரி மட்டும் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. வெளியேறவும் இல்லை.
இதனால் சுதந்திர கனல் புதுச்சேரியில் கொழுந்து விட்டு எறிந்தது. பிரெஞ்சுக்காரர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரி பிரெஞ்சு இந்திய போராட்ட வீரர்களும் பொதுமக்களும் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருவழியாக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இருப்பினும் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கான ஒப்பந்தத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதியன்று பிரெஞ்சு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுவரை நவம்பர் 1-ந் தேதியன்று புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது. முழுமையாக அதிகாரம் பெற்றதால், 1962-ம் ஆண்டுக்கு பின் புதுச்சேரியின் சுதந்திர தினம் நவம்பர் 1-ந் தேதிக்கு பதிலாக ஆகஸ்டு 16-ந் தேதியாக மாற்றப்பட்டது.
ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்களும் புதுச்சேரி பிரெஞ்சிந்திய மக்களும் நவம்பர் 1-ந் தேதியே புதுச்சேரியின் விடுதலை தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
60 ஆண்டு காலம் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களினால், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி அரசு சார்பில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார். இதனை தொடர்ந்து நடந்த போலீசார் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்றுக்கொண்டு புதுச்சேரி விடுதலை நாள் உரையாற்றினார்.
- புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.
- அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.
புதுச்சேரி:
சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக புதுச்சேரி இருந்தாலும், புதுச்சேரி அரசு என்றால் அது கவர்னரைத்தான் குறிக்கும்.
கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் அவையாகத்தான் சட்டமன்றம் விளங்குகிறது. இதனால் சட்டமன்றத்தில் முடிவு எடுத்தாலும், கவர்னரின் அனுமதி பெற்றுத்தான் திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்ற முடியும். இதனால்தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இத்தனை அதிகாரங்கள் இருந்தாலும், புதுச்சேரிக்கு வரும் பெரும்பாலான கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளில் தலையிடுவதில்லை. அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளித்து வந்தனர். இருப்பினும் ஒரு சில கவர்னர்கள் தங்களின் அதிகாரத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் உருவாகும். இதுபோலத்தான் 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசுக்கும், அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அரசின் பல திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் அரசு நிர்வாகமே அதிகாரிகள் இரண்டாக பிரிந்ததால் ஸ்தம்பித்தது. கவர்னர் மாளிகை முன்பு கருப்பு சட்டை அணிந்து முதலமைச்சராக இருந்த நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதன் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி பதவியேற்றது. அப்போது புதுச்சேரி பொறுப்பு கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தார்.
தமிழிசை அரசுக்கு சாதகமாக செயல்பட்டாலும், அவர் நேரடியாக மக்களை சந்திப்பது, குறைகேட்பது, நிர்வாகத்தில் தலையிடுவது என்பது ஆட்சியாளர்களுக்கு அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியது.
புதிய சட்டசபை, இலவச அரிசி உட்பட திட்டங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பியதால் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து தேர்தலில் போட்டியிட கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார். இதன்பின் பொறுப்பு கவர்னராக குறுகிய காலம் சி.பி.ராதாகிருஷ்ணன் இருந்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நேரடியாக தொடர்பில் உள்ள கைலாஷ்நாதன் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், ஆட்சியாளர்களிடம் அச்ச உணர்வு இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக, தனது செல்வாக்கை புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.
மீண்டும் வழங்கவே முடியாது என்ற நிலையில் இருந்த இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசிடம் பேசி, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் பெற்று தந்துள்ளார். அதேபோல தீபாவளி பண்டிகைக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை, பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரமாக சம்பளம் உயர்வு, அரசின் காலி பணியிடங்களை நிரப்ப ஆக்ஷன் பிளான், புதிய சட்டசபை வளாகம் என அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.
இது புதுவை ஆட்சியாளர்களிடையும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரவேற்பை வெளிப்படுத்தும்விதமாக கவர்னர் கைலாஷ்நாதனை வாழ்த்தியும், பாராட்டியும் புதுச்சேரி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்திய புதுச்சேரி கவர்னர்கள் சேத்திலால், சந்திராவதி, மல்கானி ஆகியோர் புதுச்சேரி மக்களின் அன்பை பெற்றவர்கள்.
அவர்கள் வரிசையில் கவர்னர் கைலாஷ்நாதனும் இடம்பெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது.
- விஜய் புதிய அரசியல்பாதை அமைப்பார் என எதிர்பார்த்தோம்.
- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பார்களையும் அகற்றுவோம்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. முதல் மாநாடு நடத்திய விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மாநாட்டில் அவர் எந்த புதிய கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் கூறிவரும் மதவாதம் ஒழிப்பு, நீட் ஒழிப்பு, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றைத்தான் கூறியுள்ளார்.
ஏற்கனவே 2 ஆண்டுகளாக ராகுல்காந்தி பல்வேறு கூட்டங்களில் பேசிய கருத்துக்கள்தான். விஜய் புதிய அரசியல்பாதை அமைப்பார் என எதிர்பார்த்தோம், ஆனால் அது இல்லை. இருப்பினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இறுதி முடிவு எடுக்க வேண்டியது மக்கள்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
புதுச்சேரியில் விடிய விடிய இயங்கிய ரெஸ்டோபாரை அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் சேர்ந்து அவர்களை விரட்டி மூடியுள்ளனர். பள்ளி, கல்லூரி குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம்.
பார்களை குறைக்க வேண்டும் என்றும் கூறி வருகிறோம். கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்களுக்கு தொடர்ந்து புதுவை அரசு அனுமதி அளித்து வருகிறது. 2026 இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றால் அனைத்து ரெஸ்டோபார்களும் மூடப்படும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பார்களையும் அகற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
- விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதலமைச்சர் ரங்கசாமிக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கும் வயது வித்தியாசம் இருந்தாலும், நல்ல புரிதலும், நட்புணர்வும் உள்ளது.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுவையை சேர்ந்தவர். இவர் புஸ்ஸி தொகுதியில் ஒருமுறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தது முதல் முதலமைச்சர் ரங்கசாமியுடன் நெருக்கம் உண்டு.
இதன் மூலம் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரங்கசாமியின் அறிமுகம் கிடைத்தது. 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்து என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் முதலமைச்சராக பதவியேற்ற ரங்கசாமி விஜய்யை பனையூரில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்து பேசினார்.
இதன் மூலம் ரங்கசாமி, விஜய் இடையே நெருக்கம் உண்டானது. கட்சி தொடங்கும் முன்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம், பல்வேறு ஆலோசனைகளை விஜய் கேட்டு வந்தார். ரங்கசாமி ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். எந்த காரியத்தை தொடங்கும் முன்பும் ஜோசியர்கள், ஆன்மீக பெரியவர்களிடம் கருத்து கேட்பார்.
அதேபோல விஜய் த.வெ.க. மாநாடுக்கும், சில ஆன்மீக வழிகாட்டுதல்களையும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
மாநாட்டில் லட்சகணக்கான இளைஞர்கள் திரண்டனர். மாநாட்டு நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை முதலமைச்சர் ரங்கசாமி, கோரிமேட்டில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து பார்த்தார். முழுமையாக விஜய் பேச்சையும் கேட்டார்.
மாநாடு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
நடிகர் விஜய்க்கு இளம் வயது. அவர் நினைத்திருந்தால் இன்னும் பல படங்களில் நடித்து பல கோடிகளை சம்பளமாக பெற்றிருக்க முடியும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். இது பாராட்டுக்குரியது.
மாநாட்டுக்கு வந்துள்ளவர்கள் அனைவரும் இளைஞர்களாக உள்ளனர். மேடையிலும் இளைஞர்களே இருந்தனர். மாநாட்டில் இளைஞர்களின் எழுச்சியை பார்க்க முடிந்தது. இதை மனதார பாராட்டுகிறேன். அவர் பல வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் தயாராக இருப்பதாக விஜய் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் காலத்தில் தமிழகத்தோடு இணைந்து புதுவையிலும் சட்டமன்ற தேர்தல் வரும்போது விஜய் த.வெ.க. கட்சியுடன், ரங்கசாமியின் என்ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
- தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி எடுக்க சென்றபோது ஓட்டம்.
- கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கண்டுபிடித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு வந்திருந்தார். பின்னர் தான் திருமணம் செய்யப்போகும் இளம்பெண்ணுடன் இந்திரா காந்தி சதுக்கம் அருகே உள்ள ஜவுளிக் கடைக்கு தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி எடுக்க வந்தார்.
இந்நிலையில் ஜவுளிக் கடையில் ஜவுளி ரகங்களை தேர்வு செய்து கொண்டிருந்த போது அந்த இளம் பெண் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜவுளிக்கடை முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் புதுப்பெண்ணை காணவில்லை.
பின்னர் ஜவுளிக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது புதுப்பெண் ஜவுளிக்கடையில் இருந்து மற்றொரு வாலிபருடன் சேர்ந்து வெளியே செல்வது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருமணம் நிச்சயித்த இளம்பெண்ணின் காதலன் என்பது தெரியவந்தது.
அந்த இளம் பெண் படிக்கும்போதே புதுச்சேரி சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
தற்போது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதால் தந்திரமாக முன்கூட்டியே தெரிவித்து காதலனை ஜவுளிக்கடைக்கு வரவழைத்து அந்த வாலிபருடன் ஓட்டம்பிடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடல் அலை வழக்கத்தைவிட அதிகமாக நுரை பொங்கியது.
- ஜெல்லி மீன்கள், பாம்புகள் செத்து கரை ஒதுங்கியது.
புதுச்சேரி:
புதுவை கடலில் கடந்த 19-ந் தேதி இரவில் அலைகள் நீல நிறத்தில் காணப்பட்டது.
மறுநாள் முதல் கடல் அலை பச்சை நிறத்தில் மாறியது. இது 2 நாட்கள் நீடித்தது. அப்போது லேசான துர்நாற்றமும் வீசியது. கடல் அலை வழக்கத்தைவிட அதிகமாக நுரை பொங்கியது. ஜெல்லி மீன்கள், பாம்புகள் செத்து கரை ஒதுங்கியது.
இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கடல்நீரை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
கடல்நீர் பச்சையாக மாற மைக்ரோ ஆல்கா நாட்டிலுக்கா என்ற கடல்பாசிதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் கடல் பழைய நிலைக்கு திரும்பியது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடினர். ஆனால் மாலையில் திடீரென சுமார் 30 அடி தூரத்துக்கு கடல் உள் வாங்கியது.
நீலம், பச்சை நிறத்தில் கடல் அலை நிறம் மாறியதும், கடல் உள் வாங்கியதும் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் நீர் உள்வாங்கியது குறித்து நிபுணர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் பருவகால மாற்றத்தின்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.
புயல் உருவாகும்போது ஒரு பகுதியில் கடல் உள் வாங்கியும், மற்றொரு பகுதியில் அதிக சீற்றத்துடனும் காணப்படும். வங்க கடலில் டானா புயல் உருவாகியுள்ளதால் புதுவையில் கடல் உள்வாங்கியிருக்கலாம். புயல் கரையை கடந்தவுடன் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்தனர்.
- ரேசன் கடை ஊழியர்கள் வாழ்வும் மேம்படும். ரேசன் கடை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
- முதலமைச்சரிடம் பேசி அதற்கான சாத்தியங்கள் ஆராய்ந்து செயல்படுத்தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு குடிமை பொருள்வழங்கல் துறை மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேசன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
அத்துடன் தீபாவளிக்கான இலவச 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையை ரேஷன் கடை மூலம் வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை சாலையில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஆகிய வற்றை வழங்கி தொடங்கி வைத்தனர்.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:-
மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. பிரதமரிடம் உணவு தானியத்துக்காக வங்கிகளில் பணம் தருவது வேறு சில பயன்பாட்டுக்கு செலவாகி விடுகிறது. பணம் தருவதை விட, ஏழை மக்களுக்கு பயன் தரும் வகையில் அரிசி தர கோரிக்கை வைத்தேன்.
கோரிக்கையின் நியாயத்தை பிரதமர் புரிந்துகொண்டு அனுமதி தந்தார். இந்தியாவில் யாரும் உணவில்லாமல் பசியோடு இருக்கக்கூடாது என நோக்கத்துடன் பிரதமர், உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
ரேசன் கடைகளை புதுச்சேரியில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறியுள்ளது. உணவு தானியங்கள் மக்களுக்கு கிடைக்கவும், ரேசன் கடை ஊழியர்கள் வாழ்வும் மேம்படும். ரேசன் கடை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடு தேடி இலவச அரிசி கொண்டு சேர்க்க பரிசீலிக்கிறோம். முதலமைச்சரிடம் பேசி அதற்கான சாத்தியங்கள் ஆராய்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
- தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- அரவிந்த்சாமி தற்கொலை செய்து கொள்ளும்போது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
நாகப்பட்டினம் மாவட்டம், தர்மதானபுரம் ஆட்டுக்கால் மண்டபத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் சாமி (வயது 30). இவர் கடந்த 5 மாதங்களாக புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கி இருந்தார். துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்களை பழுது நீக்கும் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் மேட்டுப் பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அரவிந்த்சாமி, திடீரென அவ்வழியாக வந்த தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மேட்டுப்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அரவிந்த்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அரவிந்த்சாமி திருமணமாக வில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும், இதுகுறித்து சக ஊழியர்களிடம் அவ்வப்போது கூறி வேதனை அடைந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், அரவிந்த்சாமி தற்கொலை செய்து கொள்ளும்போது போதையில் இருந்ததும் தெரியவந்தது. ஓடும் பஸ்சில் அரவிந்தசாமி பாயும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- தவெக மாநாடு வருகிற 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது.
- விஜய் பெயருக்கு அர்ச்சனை செய்து மாநாடு வெற்றி பெற வேண்டினர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு வெற்றி பெற வேண்டி புதுவை யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்ட விஜய் ரசிகர்கள் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் வழிபாடு நடத்தினர்.
சனிபகவானின் காலடியில் மாநாட்டு பத்திரிகையை வைத்து விஜய் பெயருக்கு அர்ச்சனை செய்து மாநாடு வெற்றி பெற வேண்டினர்.
- ரேசன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
- ரேசன் கடை திறக்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சிவப்பு ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இலவச அரிசி வழங்குவதில் ஆளும் அரசுக்கும். அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு இலவச அரிசிக்கு பதிலாக நேரடி பணப்பரிமாற்றதிட்டத்தை அமல்படுத்தியது.
அதன்படி கிலோ அரிசிக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டு, சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோவுக்கு ரூ.600, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 வழங்கப்பட்டு வந்தது.
வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலை அதிகரித்து வருவதால், அரசு வழங்கும் மானிய உதவி போதவில்லை என பணத்துக்கு பதிலாக மீண்டும் ரேசன் அரிசி வழங்க வேண்டும் என புதுவை மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தும், ரேசன் கடைகள் திறக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று 3 ஆண்டுகளாகியும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு ரேசன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், முதலமைச்சர் ரங்கசாமியிடம் பெண்கள் ரேசன் கடை திறந்து அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து புதுச்சேரியில் விரைவில் ரேசன் கடைகள் திறக்கப்படும் என ரங்கசாமி உறுதியளித்தார். இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, ரேசன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட்டு மாதம் பட்ஜெட் கூட்டத்தில் விரைவில் ரேசன் கடைகள் திறக்கப்படும்' என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
தொடர்ந்து ரேசன்கடை திறக்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார்.
முதல் கட்டமாக தீபாவளி பரிசாக அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இதன்படி இன்று மாலை ரேசன் கடை திறப்பு மற்றும் தீபாவளி இலவச பொருட்கள் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடைபெற உள்ளது. கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் ரேசன் கடையை திறந்து வைத்து, இலவச அரிசி, சர்க்கரையை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கின்றனர்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் தேனீ.ஜெயக்குமார். திருமுருகன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல். ஏக்கள் ஏ.கே.டி ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சிவசங்கர், தலைமை செயலர் சரத் சவுகான், குடிமை பொருள் வழங்கல் துறை செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
- மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.
- 2 நாட்களாக எதுவும் தெரியாது என கூறிய துணை ஆட்சியரிடம் போலீசார் உண்மையை வாங்கியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.
பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார். இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சனிடம் சினிமா பாணியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சன் லஞ்சமாக பல லட்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லஞ்சமாக பெற்ற பணத்தில் துணை ஆட்சியர் உல்லாச வாழ்க்கை நடத்தியுள்ளனர். குடும்பத்திற்கு மற்றும் மருத்துவ செலவிற்காக செலவிட்டு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
விசாரணையின்போது, 2 நாட்களாக எதுவும் தெரியாது என கூறிய துணை ஆட்சியரிடம் போலீசார் உண்மையை வாங்கியுள்ளனர்.
- 2 நாட்களாக அலைகள் `புளோரசன்ட் நீல’ நிறத்தில் நிறத்தில் ஜொலித்தன.
- அலை நீல நிறத்தில் ஜொலித்தபடி கரையை முட்டி மோதி கரைந்தன.
புதுச்சேரி:
வங்க கடலில் கடந்த 2 நாட்களாக அலைகள் 'புளோரசன்ட் நீல' நிறத்தில் ஜொலித்தன.
புதுச்சேரி ராக் கடற்கரையில், நேற்று கடல் அலை நீல நிறத்தில் ஜொலித்தபடி கரையை முட்டி மோதி கரைந்தன. இந்த அழகிய காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்து வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
இதேபோல் மரக்காணம் பகுதிகளிலும் கடல் அலை நீல நிறத்தில் நேற்று ஜொலித்தது. இதுகுறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவர் கூறியிருப்பதாவது:-
கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் உள்ள பல்லுயிர் நிறைந்த பகுதி. இதில் நம் கண்களுக்கு தெரியாத பாக்ட்டீரியா மற்றும் பாசி போன்ற உயிரினங்கள் அதிகம் உள்ளன.
அதுபோன்று கடலில் வாழும் ஒரு செல் உயிரியான 'டைனோ ப்ளாச்சு லேட்' வகையை சேர்ந்த 'நாட்டிலுக்காசின்டிலன்ஸ்' எனும் மிதவை நுண்ணுயிரியால் இப்போது கடல் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது. இது 'சீ பார்க்கல்ஸ் அல்லது கடல் பொறி என அழைக்கப்படுகிறது.
இந்த மிதவை நுண்ணுயிரி, கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் அதற்கான உணவு ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, இருளில் ஒளி வீசி ஜொலிக்கிறது.
இந்த நுண்ணுயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது ஒளி வெளி யாகிறது.
அப்போது அந்தப் பகுதியின் அலை 'புளோ ரசன்ட் நீல' நிறத்தில் ஜொலிக்கும். இந்த நிகழ்வை, பயோலுமினெ சென்ஸ் என அழைக்கப்படுகிறது' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்