என் மலர்


தோனிமா
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம்.
கதைக்களம்
திருச்சியில் கட்டடத் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார் காளி வெங்கட். இவரது மனைவி ரோஷ்னி பிரகாஷ் மாமனார் மாமியாருடன் சென்னையில் வசித்து வருகிறார். வீட்டுவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார் ரோஷ்னி பிரகாஷ். இவர் செவித்திறன் சவாலுடைய தனது மகன் விஷவ் ராஜ் சிகிச்சைக்காகப் பணம் சேர்த்து வருகிறார். ஒருநாள் வீட்டுவேலை முடித்து சென்று கொண்டிருக்கும் போது, குப்பைத்தொட்டியிலிருந்து ஒரு வெளிநாட்டு நாய்க்குட்டியை (தோனிமா) எடுக்கிறார். அதை தன் வீட்டிற்கு எடுத்து வந்து வளர்க்கவும் செய்கிறார்.
இந்நிலையில் குழந்தையின் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. இதற்காக கணவர் காளி வெங்கட்டிடம் பணம் கேட்கிறார். அப்போது ஒரு வடநாட்டுத் தொழிலாளி குறிப்பிட்ட தொகையை ரோஷ்னி பிரகாஷிடம் கொடுத்துச் செல்கிறார். சில நாட்களில் வடநாட்டுத் தொழிலாளி தனக்குத் திருமணம் என்று சொல்லி ரோஷ்னி பிரகாஷிடம் கொடுத்த பணத்தினை திரும்பக் கேட்கிறார்.
அதுநாள் வரையிலும் தன் கணவன் அனுப்பிய பணம் என்று நினைத்தவர் அது கடன் வாங்கிய பணம் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியாகிறார்.
இறுதியில் ரோஷ்னி பிரகாஷ் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தாரா? நாய்க்குட்டிக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் கதை.
நடிகர்கள்
படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரோஷ்னி பிரகாஷ், குடும்ப சுமையைத் தனியாளாகத் தாங்குவது போல், இப்படத்தையும் தாங்கி நிற்கிறார். தன் நடிப்பு மூலம் பார்ப்பவர்களை பரிதாபத்தை வரவழைத்து இருக்கிறார். குடியைப் பற்றி மட்டுமே எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிருக்குபவராக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார் காளி வெங்கட். சிறுவனாக நடித்து இருக்கும் விஷவ் ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, கல்கி ராஜா, தேனப்பன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். திரைக்கதையை தெளிவில்லாமல் நகர்த்தி இருக்கிறார். கதைக்கு தொடர்பு இல்லாமல் காட்சிகள் அமைத்து இருப்பது பலவீனம்.
இசை
ஜான்சன் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை, பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
வீடு மற்றும் இரவு நேரக் காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் பாக்யராஜ் மற்றும் சஜீத் குமார்.
தயாரிப்பு
L&T ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









