என் மலர்


கிங்ஸ்டன்
வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்களுக்காக போராடும் இளைஞனின் கதை.
கதைக்களம்
தூத்துக்குடி மாவட்டம் அருகே இருக்கும் கடற்கரை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவரின் தாத்தா காலத்தில் இருந்து, இந்த ஊர் மக்கள் கடலுக்குள் சென்றால் பேராசை பிடித்த ஆன்மா ஒன்று அனைவரையும் கொல்கிறது. இதனால் அரசு மீன் பிடி தொழில் செய்ய தடை விதித்து யாரும் கடலுக்குள் செல்லக்கூடாது என்று உத்தரவு போடுகிறது. வாழ்வாதாரத்தை இழந்த அந்த ஊர் மக்கள் சுமார் 40 ஆண்டுகளாக மீன் பிடிக்காமல் இருக்கிறார்கள்.
சூதாட்டம், கடத்தல் தொழில் செய்து வரும் ஜி.வி.பிரகாஷ், ஒரு கட்டத்தில் இதிலிருந்து விலகி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க நினைக்கிறார். இதற்காக தன் நண்பர்களுடன் மர்மம் நிறைந்த கடலுக்குள் செல்கிறார். இறுதியில் கடலுக்குள் சென்ற ஜி.வி.பிரகாஷ் என்ன ஆனார்? கடலுக்குள் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜி.வி.பிரகாஷ், மீனவ கிராமத்து கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஒரு சில இடங்களில் யதார்த்தம் மீறிய நடிப்பாக இருந்தது. ஒரே மாதிரியான நடிப்பை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு பெரிய வேலை இல்லை. தோற்றமும் பேச்சும் திவ்ய பாரதிக்கு பொருந்தவில்லை.
அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
கடலில் நடக்கும் மர்ம கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கமல் பிரகாஷ். திகில் கலந்த ஃபேண்டஸி படமாக திரைக்கதை அமைத்து இருக்கிறார். காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தாலும் கதை, திரைக்கதை ரசிக்கும் படியாக இல்லாதது வருத்தம். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கிறார்.
இசை
நடிப்பை விட இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்து உள்ளது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்.
தயாரிப்பு
Zee Studios & Parallel Universe Pictures நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது.












