என் மலர்


சாலா
மதுவால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் படம்.
கதைக்களம்
ராயபுரம் பகுதியில் உள்ள மதுபான பாரில் பல ஆண்டுகள் முன்பு நடந்த கொலை சம்பவத்தால் மூடப்பட்ட மதுபான பாரை கைப்பற்றுவதில் அருள் தாஸ் மற்றும் சார்லஸ் வினோத் ஆகியோருக்கிடையே போட்டி நடக்கிறது. அருள் தாஸுக்கு பக்கபலமாக நாயகன் தீரன் செயல்பட்டு வருகிறார். இவருக்கும் சார்லஸ் வினோத் குழுவினருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாணவிகளையும் மக்களையும் திரட்டி போராடி வருகிறார் நாயகி ரேஷ்மா வெங்கடேஷ். இவருடன் மோதலில் ஈடுபடும் தீரன், ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் மதுபான பார் யாருக்கு சென்றது? மது ஒழிப்பு போராட்டத்தில் ரேஷ்மா வென்றாரா? தீரனின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தீரன் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். இவரது கட்டுமஸ்தான உடல் ஆக்ஷன் காட்சிகளில் உதவி இருக்கிறது.
மக்களை திரட்டி போராடும் ரேஷ்மா வெங்கடேஷ் நடிப்பில் பளிச்சிடுகிறார். மதுபான கடையை முற்றிலும் ஒழித்தே தீருவேன் என ஆசிரியை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
கேங்ஸ்டர் ஆக போலி மதுபானம் தயாரிப்பது மற்றும் ரவுடி கதாபாத்திரத்தில் மோதிக் கொள்வது என வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சார்லஸ் வினோத். ஆர்ப்பாட்டம் இல்லாத ரவுடிதனத்தை தனது உடல் மொழியால் வெளிப்படுத்தும் அருள்தாஸ் இறுதியில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.
இயக்கம்
மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணிப்பால். மோதல் காட்சிகள் அதிகம் இடம் பெற்றாலும் மது மற்றும் சாலை விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக படத்தின் மூலம் கருத்தோடு வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. திரைக்கதையில் இன்னும் தீவிர கவனம் செலுத்தி இருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு.
இசை
தீசன் இசையில் பாடல்களையும் பின்னணி இசையையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறதுப்பதிவு
ஒளிப்பதிவு
ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.
தயாரிப்பு
டிஜி விஷ்வா பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்.










