என் மலர்


எமகாதகி
இறந்த பெண், பாடையில் ஏற மறுக்கும் சடலத்தின் கதை
கதைக்களம்
நாயகி ரூபா கொடவையூர் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று மகிழ்ச்சியான குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். ஒருநாள் நாயகியின் அப்பா கோபத்தில் திட்டி அடித்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்கிறார் ரூபா கொடவையூர். வெளியே தெரிந்தால் வேறு விதமாக பேசுவார்கள் என்று நினைக்கும் குடும்பத்தார், அவருக்கு ஏற்கனவே இருந்த ஆஸ்துமா பிரச்சனையால் இறந்தவிட்டதாக ஊர் மக்களிடம் சொல்கிறார்கள்.
இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல தயாராகும் போது, தூக்க முடியாத அளவுக்கு சடலம் கனமாக இருப்பதோடு, திடீரென்று அசைவுகள் தெரிகிறது. இதனால் துக்க வீட்டில் சற்று சலசலப்பு ஏற்பட, மீண்டும் சடலத்தை தூக்க முயற்சிக்கும் போது அந்த சடலம் எழுந்து உட்கார்ந்து விடுகிறது. இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளாகிறது.
இறுதியில் நாயகி ரூபா கொடவையூர் என்ன ஆச்சு? ரூபா கொடவையூர் சடலம் எழுந்து உட்கார காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் 90 சதவீதம் பிணமாக நடித்து காட்சிகளுக்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார் நாயகி ரூபா கொடவையூர். காதலி இறந்ததை கண்டு துடிக்கும் உணர்வு பூர்வ காட்சிகளில் நாகேந்திர பிரசாத்தின் நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது. மகள் இறந்ததை நினைத்து சிலையாக பித்து பிடித்தது போலவும், மகளுக்கு நடந்த கொடுமைகள் தெரிய வரும் போது, பொங்கி கதறும் காட்சிகளில் தனக்கே உரிய அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார் கீதா கைலாசம். ஹரிதா, சுபாஷ் ராமசாமி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
இறந்த பெண், பாடையில் ஏற மறுத்து அசையாமல் கிடக்கும் சடலம் என ஆச்சர்யத்துடனும், மிரட்டலுடனும் வித்தியாசமான கதையை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் யூகிக்க முடியாத திருப்பம் படத்துக்கான பெரிய பலமாக அமைந்துள்ளது. சாதி பாகுபாடு, பெண்ணியம், ஆணவக்கொலை மற்றும் அதன் பின்னணி ஆகியவை குறித்து பேசி இருக்கிறார் இயக்குனர். சுவாரஸ்யமான திரைக்கதை படத்திற்கு பலமாக அமைந்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
ஜெசின் ஜார்ஜீன் இசையும், சுஜித் சாரஸ் ஒளிப்பதிவும் கதைக்கேற்றவாறு பயணிக்கிறது.
தயாரிப்பு
A Naisat Media Works Productions நிறுவனம இப்படத்தை தயாரித்துள்ளது









