என் மலர்
சென்னை
- இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை ‘கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது.
- இந்த ஆண்டு இறுதிக்குள் ஏன், ஓரிரு நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டியதும், 'என்னது 50 ஆயிரம் ரூபாயை தங்கம் தொட்டுவிட்டதா?' என திகைக்கும் அளவுக்கு விலை உயர்ந்து இருந்தது. அதன்பிறகு விலை கொஞ்சம்கூட குறையவில்லை.
அவ்வாறு விலை உயர்ந்து வந்து, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது.
கடந்த ஆண்டில் இருந்த உயர்வை காட்டிலும், நடப்பாண்டில் தங்கம் விலை, ராக்கெட், ஜெட் என இன்னும் நொடிப்பொழுதில் வேகம் எடுக்கக்கூடிய எதனுடனும் ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்தநேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி விற்பனை ஆனது. இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்த நேரத்தில், மீண்டும் விலை ஏறத்தொடங்கியது.
அதிலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை 'கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனை ஆனது.
நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதே நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏன், ஓரிரு நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தநிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆக விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400
10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-12-2025- ஒரு கிராம் ரூ.216
11-12-2025- ஒரு கிராம் ரூ.209
10-12-2025- ஒரு கிராம் ரூ.207
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
- எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு செல்லும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சலை தலை வெளியீட்டு விழாவிலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார்.
- கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார்.
- ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவான த.வெ.க. சட்டசபை தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாத பொருளாக மாறி வருகிறது.
பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது.
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இனி வரும் நாட்களில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக ஜனவரி 2-வது வாரம் வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தநிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் என குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தேர்வை விஜய் நடத்தி முடித்து, உடனடியாக அதற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்.
- தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
- டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.
சென்னை:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு 'மைக்ரோ சிப் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
இந்த மேக்ரோ சிப்களை வழங்கும் டெண்டர், 'எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூசன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர், அந்த டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.
இந்த டெண்டரை எதிர்த்து 'எக்ஸ்ஹீலர்' நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, "டெண்டரில் பல்வேறு குளறுபடிகள், விதிமீறல்கள் நடந்துள்ளன எனக்கூறி அந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
- விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
- விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்திருந்தனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கில் விரைவில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரணை நடத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
- சென்னையில் நாளை அதிகாலை 4.45 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
- அதிகாலை 3 மணி முதல் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
இந்திய கடற்படையை போற்றும் விதமாக கடற்படை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக நாளைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதே வேளையில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை (கோயம்பேடு வழியாக) நேரடி ரெயில் சேவை காலை 3 மணி முதல் 5 மணி வரை இயக்கப்படாது என்றும், இந்த நேரங்களில் பயணிகள் எம்.ஜி.ஆர். சென்டிரல் (கிண்டி வழியாக செல்லும் ரெயில்களில்), ஆலந்தூர் அறிஞர் அண்ணா மெட்ரோ நிலையங்களில் வழித்தடங்களை மாற்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர்," தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் 43 சதவீதம் பெண்கள் பணியாற்றுகின்றன், விளையாட்டிலும் சாதிக்கின்றனர்" என்றார்.
இதுகுறித்து மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்," இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பெண்களுக்கு உரிமை கொடுத்தது, ஆனால் தமிழ்நாடு அதிகாரத்தை கொடுத்தது. பெண்ணுரிமையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி.
திராவிட மாடல் அரசு என்றாலே அது பெண்களுக்கான அரசு என்று இந்திய ஒன்றியமே சொல்கிறது.
உத்தியோகம் புருஷனுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் அழகு என மாற்றிக் காட்டியுள்ளது நம் அரசு" என கூறினார்.
- நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
- புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட 2ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் பேசிய பெண்களின் பேச்சை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் உள்ளத்தில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி.
தனது 100 வயதில் பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் கிருஷ்ணம்மாள்.
2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முன்னோடி திட்டங்களை செயல்படுத்த தொடங்கினேன்.
நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது. வரலாற்றை திருத்தி எழுதக் கூடிய திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.
திராவிட மாடல் அரசின் பல்வேறு அரசுத்திட்டங்களால் பலர் பயன் அடைந்து வெற்றி பெற்றுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வெற்றியின் உச்சம் அண்டை மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தான்.
மகாராஷ்டிரா, சத்தீர்கர், கர்நாடகா உள்பட 10 மாநிலங்களில் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்டம்.
- விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கம்.
தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறுகின்றனர்.
இதில், விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தால் மேலும் 17 லட்சம் பேர் உரிமைத்தொகையை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
- போட் கிளப் நிலையம் நோக்கி அதன் இரண்டாவது சுரங்கம் அமைக்கும் பணியை இன்று தொடங்கியது.
மயில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையம்- போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"மயில்" சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் UG-01 மற்றும் UG-02 என இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 4 கி.மீ. இரட்டை சுரங்கப்பாதைகளைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் தோராயமாக 16 கி.மீ. நீளத்தில் மொத்த சுரங்கப்பாதையை முடிக்க, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வழித்தடம் 4-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரையிலான (downline) 1898 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று 12.12.2025 தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு.சி.முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியம் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் "மயில்", முதலில் வழித்தடம்-4-ல் மே 02, 2024 அன்று பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியயை தொடங்கி, 2 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை 23.07.2025 அன்று வந்தடைந்தது.
அந்த துளையிடும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது பயன்பாட்டில் உள்ள இரயில் பாதைக்கு இணையாக சுரங்கப்பாதையை துளையிட வேண்டியிருந்தது.
இதனை தொடர்ந்து, சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில், கோடம்பாக்கம் நிலையத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, மீண்டும் பனகல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பனகல் பூங்கா நிலையத்தில் மறுசீரமைக்கப்பட்டது. பின்னர் இது போட் கிளப் நிலையம் நோக்கி அதன் இரண்டாவது சுரங்கம் அமைக்கும் பணியை இன்று தொடங்கியது.
இந்தப் பிரிவில் இரட்டை சுரங்கப்பாதைகளில் ஒரு சுரங்கப்பாதையை அமைப்பதற்காக தொடங்கப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இதுவாகும். இந்தச் சுரங்கப்பணியில் குறிப்பிடத்தக்க பொறியியல் சவால்கள் அடங்கும். குறிப்பாக, நந்தனம் மெட்ரோ நிலையம் அருகே ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் முதல் கட்ட மெட்ரோ சுரங்கப்பாதைகளுக்கு அடியில் சுரங்கம் தோண்ட வேண்டியுள்ளது. இந்த சுரங்கப் பாதை, தரை மட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 30.2 மீட்டர் (100 அடி) ஆழம் வரை செல்கிறது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் வழித்தடம்-4-ல் (Down Line) பனகல் பூங்காவிலிருந்து நந்தனத்தை நோக்கி நகர்ந்து, இறுதியாக போட் கிளப் நிலையத்தை வந்தடையும். இந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணியானது நவம்பர் 2026-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
- "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு கர்நாடகா அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பொம்மை முதல்வர் மு.க.ஸடாலின்-ன் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக ஆட்சி இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இரண்டாம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்.
- எஞ்சிய மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை தருவது மக்கள் மீதான அக்களையால் இல்லை தேர்தல் நாடகம்.
சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே எஞ்சிய மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படுவதாக அதிமுக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வௌியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என அடிக்கடி முழங்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!
எப்போது கொடுத்தீர்கள்.?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் உரிமைத்தொகை கொடுத்தீர்கள்.
இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு என அறிவித்துவிட்டு அதிலும் 13 லட்சம் பேரை தவிர்த்துவிட்டு 17 லட்சம் பேருக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள்.
இது இன்னும் எவ்வளவு மாதம் கொடுக்க முடியும்? வெறும் நான்கு மாதங்கள் மட்டும்தான், அப்படியென்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை?
தற்போதும் விடியா திமுக அரசு குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான்,மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. உங்கள் நாடகம் மக்கள் அறியாமல் இல்லை. உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதாமல் இருக்கப் போவதும் இல்லை.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






