என் மலர்
இந்தியா
அசாமில் குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கையில் 416 பேர் கைது
- குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை அசாம் தொடர்கிறது.
- 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டமாக 3,483 பேர் கைது செய்யப்பட்டு 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தில் 915 பேர் கைது செய்யப்பட்டு 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் 3-ம் கட்டமாக நடந்த நடவடிக்கையில் 416 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை அசாம் தொடர்கிறது. டிசம்பர் 21, 22-ந்தேதிகளில் இரவு தொடங்கப்பட்ட 3-வது கட்ட நடவடிக்கை களில், 416 பேர் கைது செய்யப்பட்டனர். 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். நாங்கள் தொடர்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்போம். இந்த சமூகத் தீமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் நிஜுத் மொய்னா என்ற திட்டத்தை முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். இதில் 11-ம் வகுப்பு முதல் முதுகலை வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.