search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரோகிணி சிந்தூரி பற்றி பேச தடை: கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன்- ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா டுவிட்டர் பதிவு
    X

    ரோகிணி சிந்தூரி பற்றி பேச தடை: கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன்- ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா டுவிட்டர் பதிவு

    • உயர் பதவியில் இருந்த 2 பெண் அதிகாரிகள் பகிரங்கமாக மோதிக்கொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி, அவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ரூபா, அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

    ரோகிணி சிந்தூரி தனது தனிப்பட்ட ஆபாச புகைப்படங்களை 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பினார் என்றும், அதன் உள்நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

    அதுமட்டுமின்றி பல்வேறு முறைகேடு புகார்களையும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த ரோகிணி சிந்தூரி, ரூபா மனநலம் பாதித்தவர் போல் பேசுவதாக விமர்சித்தார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தார். உயர் பதவியில் இருந்த 2 பெண் அதிகாரிகள் பகிரங்கமாக மோதிக்கொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, 2 பேரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், அவர்கள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதன்பிறகும் மோதல் தொடர்ந்ததையடுத்து, தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடவும், அவதூறாக பேசுவதற்கும் தடை விதிக்க கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக ரோகிணி சிந்தூரி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி வரை ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ரூபா உள்பட 60 பேரை எதிர் மனுதாரராக சேர்த்திருப்பதுடன், தடை உத்தரவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க வருகிற 7-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ரூபாவுக்கு நோட்டீஸ் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ரூபா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. நீங்கள் எனக்கு அளித்த ஆதரவால் நான் பலமிக்கவளாக உணர்கிறேன். என்னுடைய மெசேஜ் பாக்ஸ் உங்களது குறுந்தகவல்களால் வெள்ளமென நிரம்பி இருக்கிறது.

    உங்களது ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி. நான் கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன். கோர்ட்டில் என்னுடைய வாதங்களை சமர்ப்பிப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×