search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கர்நாடக கவர்னர் கெலாட் மீது ஜனாதிபதியிடம் புகார்? காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
    X

    கர்நாடக கவர்னர் கெலாட் மீது ஜனாதிபதியிடம் புகார்? காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

    • அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது.
    • டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.

    இந்த புகாரை ஏற்றுக்கொண்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை, மத்திய மந்திரி குமாரசாமி, பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் முருகேஷ் நிரானி, சசிகலா ஜோலே, ஜனார்த்தன ரெட்டி உள்பட 4 பேர் மீதான முறைகேடு வழக்கு விசாரணைக்கு லோக் அயுக்தாவுக்கு அனுமதி வழங்குமாறு கவர்னரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

    மேலும் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்தும் குமாரசாமி உள்பட 4 பேர் மீதான முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர அனுமதி வழங்க வலியுறுத்தினர்.

    இதனால் கோபம் அடைந்த கவர்னர், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர லோக்அயுக்தா அனுமதி கேட்டுள்ள விவரங்கள் பற்றி அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர், தன்னிடம் உள்ள வழக்குகளுக்கு லோக்அயுக்தா அனுமதி கோரிய விஷயம் அரசுக்கு எப்படி தெரியும் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நிலையில், பெங்களூருவில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள அர்க்காவதி லே-அவுட் நில முறைகேடு தொடர்பாக 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கெம்பண்ணா ஆணையத்தின் அறிக்கையின் நகலை வழங்கும்படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் சமயத்தில் முதல்-மந்திரியாக சித்தராமையா தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கவர்னர் அடுத்தடுத்து பல்வேறு விஷயங்களுக்கு அறிக்கை வழங்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது. கவர்னர் அனுப்பும் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கக்கூடாது என்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் மந்திரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் கெலாட்டை திரும்ப அழைக்குமாறு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொடர்ந்து கர்நாடக அரசு, கவர்னர் இடையேயான மோதல் விவகாரம் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×