search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக கடிதம்... பா.ஜனதாவின் சதிவேலை- காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக கடிதம்... பா.ஜனதாவின் சதிவேலை- காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

    • அதிகாரிகளின் இடமாற்றத்திற்கான எங்களின் பரிந்துரை கடிதங்கள் பரிசீலிக்கப்படவில்லை.
    • பெங்களூருவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் சித்தராமையா தலைமையில் நடக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதல்-அமைச்சராக கடந்த மே மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார்.

    துணை முதல்வராக டி.கே.சிவகுமார் உள்பட மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்து கடந்த மே மாதம் 27-ந் தேதி மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் பலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு 20 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதி இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் அந்த கடிதம் சமூக வலைதளத்திலும் வெளியானது.

    20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எங்களது சட்டமன்ற பணிகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். மேலும் அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை. 3-வது நபரின் உதவியுடன்தான் சந்திக்க வேண்டியதிருக்கிறது. இதனால் மக்களின் விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. 3-வது நபரின் மூலமாகத்தான் எங்களுக்கு அமைச்சர்கள் செய்திகளை பகிர்கின்றனர். நிதி திட்டங்கள் குறித்து அமைச்சரை சந்திக்க முடியவில்லை.

    உள்ளூர் எம்.எல்.ஏ.க்களாக இருந்தும் 3-வது நபரின் வாயிலாக அமைச்சர்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது என்பது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அதிகாரிகளின் இடமாற்றத்திற்கான எங்களின் பரிந்துரை கடிதங்கள் பரிசீலிக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் எங்கள் பேச்சை கேட்பதில்லை.

    எனவே முதல்-அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் அதில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.பாட்டில், ஆர்.வி.தேஷ்பாண்டே, எம்.கிருஷ்ணப்பா, பிரியகிருஷ்ணா, அல்லம்மா பிரபுபாட்டில், விஜயானந்த் உள்பட 20 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

    இந்த கடிதம் வெளியானதும் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் ஆலந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.ஆர்.பாட்டில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, மோசடிகளை தவிர்க்க எனது லெட்டர் பேடில் சீரியல் எண் பதிவிட்டு உள்ளேன். நேற்று வெளியான லெட்டர்பேடில் சீரியல் எண் எதுவும் இல்லை. எனவே இது மோசடியான கடிதம் ஆகும். இதில் பா.ஜனதாவின் சதிவேலை உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்ய உள்ளோம் என்றார்.

    இதேபோல் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் இது பொய்யான தகவல் என்று கூறினர். ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இதுகுறித்து எந்த பதிலும் கூறவில்லை. எனவே இது உண்மையான கடிதமா? அல்லது போலியாக பரப்பப்பட்ட கடிதமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே பெங்களூருவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் சித்தராமையா தலைமையில் நடக்கிறது. எனவே இந்த கூட்டத்தில் கடிதம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கடிதம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×