search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற காங்கிரஸ் பெண் வேட்பாளர் அசத்தல்
    X

    குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற காங்கிரஸ் பெண் வேட்பாளர் அசத்தல்

    • பா.ஜனதாவின் ஹாட்ரிக் கனவை காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் கலைத்துவிட்டார்.
    • பனஸ்கந்தா தொகுதியில் பால்த்துறை அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 பாராளுமன்ற தொகுதிகளில் 25 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

    பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் 30 ஆயிரத்து 406 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவர் 6 லட்சத்து 71 ஆயிரத்து 883 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ரேகாபென் ஹிதேஷ்பாய் சவுதாரி 6 லட்சத்து 41 ஆயிரத்து 477 வாக்குகள் பெற்றார்.

    இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் இதற்கு முன் 2009 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 11 தொகுதிகளை கைப்பற்றியது.

    கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இங்கு தொடர்ந்து 3-வது முறையாக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜனதா தீவிரம் காட்டியது.

    ஆனால் பா.ஜனதாவின் ஹாட்ரிக் கனவை காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் கலைத்துவிட்டார்.

    பனஸ்கந்தா தொகுதியில் கணிசமான செல்வாக்கைக் கொண்ட தாகோர் சமூகத்தை சேர்ந்த ஜெனிபன் தாகோருக்கு அதிக ஆதரவு இருந்தது. மேலும் அவரது வெற்றியில் உள்ளூர் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

    அவருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக ரூ.50 லட்சத்தை நன்கொடையாக மக்கள் வழங்கினர். பனஸ்கந்தா தொகுதியில் எந்த அரசியல் கட்சியும் தாகோர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் களமிறக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த சமூகத்தை சேர்ந்த வரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்து ஜெனிபனுக்கு டிக்கெட் கொடுத்தது.

    பனஸ்கந்தா தொகுதியில் பால்த்துறை அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பா.ஜனதா வேட்பாளர் ரேகாபெனின் தாத்தா கல்பபாய் படேல், பனாஸ் பால் பண்ணையின் நிறுவனர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×