search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியை வெறித்தனமாக புகழ்ந்தேனா? காங்கிரஸ் முதல்-மந்திரி பதிலடி
    X

    பிரதமர் மோடியை வெறித்தனமாக புகழ்ந்தேனா? காங்கிரஸ் முதல்-மந்திரி பதிலடி

    • ராகுல் காந்தி எனது தலைவர், பிரதமருக்கு பதிலாக அவரையும் சோனியா காந்தியையும் தான் புகழ்வேன்.
    • ஒரு சிலர் தங்களது மகனை முதல் மந்திரியாக்க பிரதமர் மோடியின் ஆதரவை கேட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்ற தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை மூத்த சகோதரர் என குறிப்பிட்டார் .

    இதற்கு தெலுங்கானா மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பிரதமர் மோடியை அவர் வெறித்தனமாக புகழ்ந்ததாக கூறினர். இதற்கு ரேவந்த் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

    நான் தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக நேரடியாக பிரதமர் மோடியிடம் நிதி கேட்டேன். ஒரு சிலர் தங்களது மகனை முதல் மந்திரியாக்க பிரதமர் மோடியின் ஆதரவை கேட்டனர். அது போன்ற தலைவர்கள் போல் இல்லாமல் நான் பொதுக்கூட்டத்தில் அவரை வெளிப்படையாக சந்தித்தேன்.

    நான் வைத்த கோரிக்கைகள் வெளிப்படையாகவும் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் உள்ளது. என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக அல்ல.

    நான் மோடியை வெறித்தனமாக புகழ்ந்ததாக கூறப்படுவதை நிராகரிக்கிறேன். குஜராத் மாநிலத்திற்கு வழங்குவது போல தெலுங்கானாவிற்கும் நிதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

    தெலுங்கானா வளர்ச்சிக்கு நிதி கேட்பதில் யாருக்காவது சிக்கல் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் மோடியை கவர முயற்சி செய்யவில்லை.

    ராகுல் காந்தி எனது தலைவர், பிரதமருக்கு பதிலாக அவரையும் சோனியா காந்தியையும் தான் புகழ்வேன். என்னுடைய வார்த்தைகள் மற்றும் கோரிக்கைகள் நாட்டின் கூட்டாட்சி அதிகாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×