என் மலர்
இந்தியா
மங்களூரு காங். முன்னாள் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
- அமலாக்கத்துறையினர் இன்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
- ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த தகவலின்படி பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷாரிக் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஷாரிக்கின் குடும்பத்தாரிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிம்மனே ரத்னாகர் ரூ.10 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். இந்த குத்தகை காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
இது தொடர்பான தகவல்களின்படி அமலாக்கத்துறையினர் இன்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகம் குத்தகை தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை சரி பார்த்ததாக தெரிகிறது.
இதனிடையே ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.