search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா காங்கிரஸ் அரசு அதிரடி: 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு பாடம் மீண்டும் சேர்ப்பு
    X

    கர்நாடகா காங்கிரஸ் அரசு அதிரடி: 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு பாடம் மீண்டும் சேர்ப்பு

    • கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது.
    • மாணவர்கள் சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்கொ ரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது. இந்த பாட பகுதிகளை நீக்கியது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் நீக்கப்பட்ட பாடப் பகுதிகளை மீண்டும் சேர்ப்பது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்சபை தேர்தலின் போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. அரசாங்கத்தின் போது பாட புத்தகங்களில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது.

    தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவை அமைத்தது. இக்குழு கர்நாடக அரசின் 6 முதல் 10 ம் வகுப்புகளுக்கான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரையை வெளியிட்டுள்ளது.

    இந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி, 10-ம் வகுப்பு வரலாறு பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சமூக சீர்த்திருத்தங்கள் பாடம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

    பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது மாணவர்களை சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள் என கர்நாடகா கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×