search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குண்டுகளை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்த ஷாரிக்- ஐ.எஸ். தீவிரவாதிகள் தூண்டியது அம்பலம்
    X

    குண்டுகளை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்த ஷாரிக்- ஐ.எஸ். தீவிரவாதிகள் தூண்டியது அம்பலம்

    • பெங்களூரு, மங்களூருவை சேர்ந்த 5 பேரை பிடித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • தென் மாநிலங்களில் பல நகரங்களில் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு ஓசையின்றி சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கர்நாடகாவின் சிவ மொகா மாவட்டம் சொப்புகுட்டோ என்ற கிராமத்தில் பிறந்த ஷாரிக்குக்கு இப்போது 27 வயதாகிறது. சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டதால் இவனை சபானாபானு என்பவர் எடுத்து வளர்த்து வந்தார்.

    பி.காம் படித்துள்ள இவன் அதன் பிறகு தனது தந்தையின் சிறிய துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்த பிறகு அவனது நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கும் போதே வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், மெசேஞ்சர் ஆகிய சமூக வலைதளங்களில் இவன் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி இருந்தான்.

    சமூக வலைதளங்கள் மூலம் அவனுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகுதான் அவன் வெடிகுண்டு தயாரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாகி இருக்கிறான். ஐ.எஸ். தீவிரவாதிகளின் தூண்டுதல் காரணமாக தற்கொலை படை தீவிரவாதிகளில் ஒருவனாகவும் மாறி இருந்தான்.

    பி.காம் படிப்பை 2-வது ஆண்டிலேயே அவன் கை விட்டு விட்டான். தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவனால் படிப்பை தொடர முடியவில்லை என்பது தெரிய வந்தது. கல்லூரியில் படிக்கும் போதே நவீன வெடிகுண்டுகளை தயாரிக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுள்ளான்.

    ஆனால் குக்கர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் அவனுக்கு தெரியவில்லை. இதனால் கல்லூரியில் எம்.டெக் படிக்கும் மாணவர்களிடம் இதுபற்றி ஷாரிக் கேட்டு தெரிந்து கொண்டது தெரிய வந்தது. எம்.டெக் மாணவர்கள் கொடுத்த பயிற்சியின் அடிப்படையில் அவன் குண்டுகளை தயாரிக்க தொடங்கி உள்ளான்.

    இதற்கிடையே அவன் மீது மங்களூருவில் 3 போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவானது. தேச துரோக வழக்குகள் பதிவானதால் அவன் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு இருந்தான். இதன் காரணமாகவே அவன் சொந்த ஊரில் இருந்து வெளியேறி மைசூர், கோவை, மதுரை, நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலங்களில் சுற்றி திரிந்துள்ளான்.

    மைசூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது தான் குண்டுகளை தயாரித்துள்ளான். அவன் வசித்த வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள கிரைண்டர்கள், கீ பேடுகள், போன்கள், ஆணி மற்றும் பேட்டரிகள், கேபிள் வயர்கள், சல்பைடு, பொட்டாசியம் குளோரைடு, கண்ணாடி துகள்கள் ஆகியவை இதை உறுதிப்படுத்தி உள்ளன.

    அவன் இருந்த வீட்டில் குக்கர் படம் வரைந்து அதை வெடிக்க வைப்பதற்கான நடைமுறைகள் கொண்ட புத்தகத்தையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கர் வெடிகுண்டைதான் மைசூரில் இருந்து மங்களூருக்கு ஷாரிக் பஸ்சில் கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.

    குக்கர் குண்டை பயன்படுத்தி கர்நாடகாவில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ஷாரிக்கின் இலக்கு ஆகும். இதற்காக டெலிகிராம் சமூக வலைதளத்தில் கிடைத்த பி.டி.எப். பைல்கள் மூலமாக குக்கர் வெடிகுண்டுகளை தயாரித்து இருக்கிறான். அந்த வெடிகுண்டுகளை அவன் வெடிக்க வைத்து ஒத்திகையும் பார்த்து இருக்கிறான்.

    சிவமொகா மாவட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வன பகுதிகளில் குக்கர் வெடிகுண்டை ஷாரிக் வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்து இருக்கிறான். இந்த ஒத்திகை சம்பவத்தின்போது அவனுக்கு அவனது நண்பர்கள் யாஷின், மாஸ் இருவரும் உதவி செய்துள்ளனர்.

    ஒத்திகையின்போது குக்கர் வெடிகுண்டுகள் திட்டமிட்டபடி வெடித்தன. அதன்பிறகுதான் ஷாரிக் சக்தி வாய்ந்த குக்கர் வெடி குண்டை தயாரித்து இருக்கிறான். அதன் பிறகு அதை மைசூரில் இருந்து மங்களூருவில் பஸ்சில் கொண்டு சென்று இருக்கிறான். மங்களூரு அருகே சாலையில் சென்றபோது குக்கர் தானாக வெடித்ததால் சிக்கிக் கொண்டான்.

    குக்கர் வெடிகுண்டுடன் புறப்படும் முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் போல உடை அணிந்து வெடிக்க வைக்க போகும் குக்கருடன் புகைப்படம் எடுத்துள்ளான். அந்த படத்தை நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுவாக நாசவேலை செய்யும் முன்பு இப்படி படம் எடுத்துக்கொள்வது வழக்கமாகும். அதே பாணியை ஷாரிக்கும் கடைபிடித்துள்ளான்.

    இதன் மூலம் அவனை இயக்கியது சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு என்பது தெரிய வந்துள்ளது.

    ஐ.எஸ். தீவிரவாதிகளின் தூண்டுதல் பேரில்தான் ஷாரிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை சேகரித்து இருக்கிறான். அந்த வெடிபொருட்களை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி அவனுக்கு சொல்லி கொடுத்தது அப்துல் மதீன் தகா என்ற தீவிரவாதி ஆவான்.

    அப்துல் மதீன் தகா தீவிரமான ஐ.எஸ். தீவிரவாதி ஆவான். இவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்துள்ளனர். தென் இந்தியாவில் ஐ.எஸ். மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்பதே இவனது இலக்கு ஆகும். இதற்காகவே இவன் பலரை மூளை சலவை செய்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து வந்தான்.

    அந்த வகையில் அப்துல் மதீன் தகா வலையில் அர பாத்அலி என்பவன் சிக்கினான். இந்த அரபாத் அலி தற்போது துபாயில் இருக்கிறான். இவன் மூலம்தான் ஷாரிக் தீவிரவாத செயல்களை மறைமுகமாக செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

    ஷாரிக்குக்கு கர்நாடகா தவிர தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களிலும் ஏராளமானவர்களுடன் தொடர்பு இருந்தது. இதன் மூலம் அவனும் அவனது கூட்டாளிகளும் தென் மாநிலங்கள் முழுக்க நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    கோவையில் நடந்த கார் வெடிப்புக்கு அவர்கள் உதவி செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் யார் யார் என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரவாத விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஷாரிக்கின் செல்போன் மூலம் அவனது நட்பு வட்டாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஓசையின்றி தொடங்கி உள்ளனர்.

    ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல தடவை தமிழ்நாடு, கேரளாவுக்கு வந்து சென்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு நகரங்களில் அவன் பலரை சந்தித்து பேசி இருக்கிறான். அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பேஸ் மூவ்மென்ட் என்ற ரகசிய அமைப்பில் இடம் பெற்றவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    குக்கர் வெடிகுண்டை நடத்துவதற்காக ஷாரிக் வெளியே ஒரு இடத்தில் மது அருந்தி உள்ளான். அப்போது அவனிடம் 2 பேர் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் யார் என்பதும் மர்மமாக உள்ளது.

    இந்த நிலையில் பெங்களூரு, மங்களூருவை சேர்ந்த 5 பேரை பிடித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஷாரிக் மைசூரில் வாடகை வீட்டில் இருந்தபோது அங்கே ஒரு பெண் வந்து சென்றுள்ளார். அதுபோல நாகர்கோவிலிலும் அவன் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே ஷாரிக்கை சுற்றி பெண் பயங்கரவாதிகளும் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    இதன் மூலம் தென் மாநிலங்களில் பல நகரங்களில் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு ஓசையின்றி சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரையும் வேட்டையாட என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×