search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உடனடி கடன் ஆப் மூலம் ரூ.321 கோடி மோசடி: நிர்வாணமாக போட்டோக்களை சித்தரித்து மிரட்டல்
    X

    உடனடி கடன் ஆப் மூலம் ரூ.321 கோடி மோசடி: நிர்வாணமாக போட்டோக்களை சித்தரித்து மிரட்டல்

    • 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது.
    • 14 பேர் தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு கடன் பெற செல்போனில் உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார்.

    அவர் வாங்கிய ரூ.10 ஆயிரம் கடனுக்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து, அவரி டமிருந்து ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர்.

    இருப்பினும், அவரை விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பு எண்ணிலுள்ள அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர்.

    இதுபற்றி அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக 2023-ம் ஆண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது. மேலும் வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-அப் விவரங்கள் டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார்-யார் பெயரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர், பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.


    இதில் இந்தியா முழுவதும் 14 பேர் இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிபடையினர் விசா ரணையில், முதலாவது குற்றவாளியாக முகமது ஷபி (வயது 37) என்பவர் கேரளாவில் உள்ள எர்ணா குளத்தில் கைது செய்யப் பட்டார். லாரி டிரைவரான முகமது ஷபி சைபர் கும்பலுடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவருடைய 3 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.10 கோடியே 65 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும், அவரிடம் வங்கி கணக்கை வாங்கிய நபர்க ளின் விவரங்கள் சேகரிக்கப் பட்டது. மொத்தமாக இந்த 14 பேரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் சேர்த்து ரூ. 300 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட குஜராத்தை சேர்ந்த சித்தன் முகேஷா என்பவரை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அவரின் ரூ.321 கோடி பணத்தை அமலாக்கதுறை முடக்கி வைத்துள்ளது.

    மேலும் இந்த மோசடியில் தமிழகத்தை சேர்ந்த முஜிப் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். மொத்தம் 14 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் 11 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்யப்படும் போது அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரிய வரும். கடன் வாங்கியோரை கம்போடியாவிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    தற்போது புதுச்சேரி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்ட முகமது ஷபியிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×