search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகள் மீது  நாட்டுவெடிகுண்டுகள் வீச்சு
    X

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகள் மீது நாட்டுவெடிகுண்டுகள் வீச்சு

    • கொலைமுயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி ரதீஷ் மற்றும் சமீர் மீது வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் லாலூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரதீஷ் (வயது33), சமீர்(30). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர்கள் ஆவர். ரதீஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.வில் இருக்கிறார்.

    இவர்களுக்கு திருவனந்தபுரம் அம்பலத்தாரா பகுதியை சேர்ந்த அவர்களது கட்சி பிரமுகர்கள் சிலருடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அம்பலத்தாரா இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு பகுதி செயலாளரான அருண் என்பரை ரதீஷ் தாக்கியுள்ளார்.

    இது தொடர்பாக ரதீசிடம் விசாரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் செயலாளர்கள் அனூப், பாபுராஜ், கட்சி தொண்டர்கள் பாலகிருஷ்ணன், அருண் ஆகியோர் சென்றனர். சமீரின் வீட்டில் ரதீஷ் இருப்பதை அறிந்து அங்கே சென்றனர். அப்போது அவர்களை நோக்கி ரதீஷ் மற்றும் சமீர் ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

    அந்த குண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகளின் அருகில் விழுந்து வெடித்தது. அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதுகுறித்து அம்பலத்தாரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரதீஷ் மற்றும் சமீர் மீது வழக்கு பதிந்தனர்.

    அவர்களின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. சமீரை போலீசார் கைது செய்தனர். ரதீஷ் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகியை தாக்கியது தொடர்பாக விசாரிக்க வந்த கட்சி நிர்வாகிகள் மீது அதே கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×