search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இலங்கை சுதந்திர தின கொண்டாட்டம்: யாழ்ப்பாணத்தில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்
    X

    இலங்கை சுதந்திர தின கொண்டாட்டம்: யாழ்ப்பாணத்தில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்

    • இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார்.
    • தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளில் கறுப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    கொழும்பு:

    இலங்கையில் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுக திடலில் பிரதான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    அதிபர் ரணில் விக்ரம சிங்கே, பிரதமர் தினேஸ் குணவர்தன, மந்திரிகள், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழாவில் ராணுவ வீரர்கள், ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு நடந்தது.

    இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். அதே போல் வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    இந்த முறை சுதந்திர தின விழாவில் அதிபர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றவில்லை. மாலை 6.45 மணிக்கு அதிபரின் உரை ஊடகங்களின் மூலம் ஒளி, ஒலிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்காததை கண்டித்து தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டங்கள் நடந்தது. வீடுகளில் கறுப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. இன்றைய தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் எதிர்ப்பு பேரணி நடத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    பேரணிக்கு ஆதரவாக வர்த்தகர்கள் தங்களது கடைகளை அடைத்தனர். யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.

    Next Story
    ×