search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் ஜனாதிபதி முர்முவுக்கு இன்று பாராட்டு விழா
    X

    பெங்களூருவில் ஜனாதிபதி முர்முவுக்கு இன்று பாராட்டு விழா

    • பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வருகை தந்தார். மைசூரு தரசா விழாவை தொடங்கி வைத்த அவர், பின்னர் உப்பள்ளி சென்று ஐ.ஐ.டி. வளாகத்தை திறந்து வைத்திருந்தார்.

    இந்த நிலையில், உப்பள்ளி நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர் பின்பு ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலையில் பெங்களூரு விதானசவுதாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கர்நாடக அரசு சாா்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் இந்த பாராட்டு விழா நடக்கிறது.

    ஜனாதிபதி விதானசவுதாவுக்கு வருவதையொட்டி, பாதுகாப்பு கருதி அங்கு பணியாற்றும் அனைத்து அரசு ஊரியர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுக்க கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து இருந்தது.

    இதையடுத்து இந்த ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை ரூ.208 கோடி செலவில் கட்டி முடிக்க கடந்த 2016-ம் ஆண்டு இஸ்ரோ-எச்.ஏ.எல். இடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருந்தது. இந்தநிலையில் பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்க உள்ளார்.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கின. 2014-ம் ஆண்டு இந்தியா விண்ணில் ஏவிய ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.

    இதன்மூலம் கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரிக்க ரூ.860 கோடி ஒப்பந்தத்தை புதிய விண்வெளி இந்திய நிறுவனத்திடம் இருந்து எச்.ஏ.எல்.எல் அன்ட் டி நிறுவனங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×