search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட எருமை மாடு- ராஜஸ்தானில் ருசிகர சம்பவம்

    • வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
    • வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து வருகிறார்.

    கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு சொந்தமான 3 எருமை மாடுகள் திருட்டு போயின. இதுகுறித்து சரண்சிங் செராவத் ஹர்மதா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் பரத்பூர் பகுதியில் இருந்து 2 எருமை மாடுகளை மீட்டு ஒப்படைத்தனர். அதில் ஒரு எருமை மாடு சில நாட்களில் இறந்து விட்டது. மேலும் இந்த எருமை மாடுகள் திருட்டு தொடர்பாக அர்ஷத் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் இதுதொடர்பான வழக்கு சவுமு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் எருமை மாட்டின் உரிமையாளரான சரண்சிங் செராவத் உள்பட மொத்தம் 21 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சரண்சிங் செராவத் எருமை மாட்டை ஒரு வாகனத்தில் ஏற்றி கோர்ட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

    இந்த சம்பவம் கோர்ட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியால் எருமை மாடு அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யபட உள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    Next Story
    ×