search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி- அழகான பெண் குழந்தை பிறந்தது
    X

    கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி.


    ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி- அழகான பெண் குழந்தை பிறந்தது

    • விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே நிறுத்தங்கள் எதுவும் இல்லாததால் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
    • மருத்துவ மாணவி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். மற்ற பயணிகளும் அவருக்கு உதவ முன்வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை புறப்பட்டு வந்தது.

    அதில் உள்ள ஏசி பெட்டியில் ஐதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் அவரது கர்ப்பிணி மனைவியுடன் பயணம் செய்தார். விஜயவாடா-விசாகப்பட்டினம் இடையே அதிகாலை 5.35 மணிக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் துடித்தார்.

    ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் என்ன செய்வது என்று திகைத்து உதவி செய்ய முடியாமல் தவித்தனர்.

    அதிர்ஷ்டவசமாக அதே பெட்டியில் குண்டூர் மாவட்டம் நரசராவ் பேட்டையை சேர்ந்த 4-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவி சுவாதி ரெட்டி என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கர்ப்பிணி பெண்ணுக்கு முதலுதவி அளிக்க தொடங்கினார்.

    விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே நிறுத்தங்கள் எதுவும் இல்லாததால் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவ மாணவி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். மற்ற பயணிகளும் அவருக்கு உதவ முன்வந்தனர்.

    ரெயிலில் ஒரு பகுதியை பிரசவ அறை போல மாற்றுவதற்காக அவர்கள் போர்வை மற்றும் துணியால் கொண்டு மூடி மறைத்தனர்.

    மருத்துவ மாணவி சுவாதிரெட்டிக்கு தேவையான உதவிகளை செய்ய அங்குள்ள சில பெண்களும் முன் வந்தனர்.

    இதனால் மருத்துவ மாணவி துணிச்சலுடன் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினார். சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனால் ரெயில் பயணிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் மருத்துவ மாணவிக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் ரெயிலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மாணவி தன்னிடம் இருந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு கர்ப்பிணிக்கு மேலும் முதல் உதவிகளை அளித்தார்.

    பிறந்த குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் பயணம் செய்தது ஏசி பெட்டி என்பதால் குழந்தை குளிரில் நடுங்க தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து மற்ற பயணிகள் தங்களது போர்வைகளை கொடுத்து குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைக்க உதவி செய்தனர்.

    ரெயில் அனக்கா பள்ளி நிலையத்திற்கு வந்ததும் 108 ஆம்புலன்ஸ் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் தாய் மற்றும் குழந்தையை எடுத்துச் சென்று மருத்துவ மாணவி அங்குள்ள என்டிஆர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ மாணவியை டாக்டர்கள் மற்றும் கல்லூரி தோழர்கள் பாராட்டினர். இது குறித்து மருத்துவ மாணவி கூறுகையில்:-

    கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் ஆஸ்பத்திரியை தொடர்பு கொள்ள முடிவு செய்தோம். ஆனால் இடையில் எந்தவித நிறுத்தங்களும் இல்லாததால் அது முடியவில்லை. எனவே நானே பிரசவம் பார்க்க முடிவு செய்தேன்.

    இது நான் சொந்தமாக செய்த முதல் பிரசவம் என்பதால் மிகவும் கவலைப்பட்டேன். மேலும் எனக்கு பயமும் ஏற்பட்டது.

    நான் முன்பு ஆஸ்பத்திரியில் உதவி பேராசிரியர்களிடம் பயிற்சி பெற்றுள்ளேன். அதன்படி செயல்பட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நஞ்சுக்கொடி 45 நிமிடங்களுக்கு வெளியே வரவில்லை. அதனால் எனக்கு கவலை ஏற்பட்டது. குழந்தை வெளியே வந்ததும் எனக்கு நிம்மதியாக இருந்தது.

    இந்த பிரசவத்திற்கு அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் உதவி செய்தனர். இதன் மூலம் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என்றார்.

    Next Story
    ×