search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் பிரசாரத்திற்கு நடுவே பழங்குடியின சிறுவர்களை தேடிச்சென்று சந்தித்த பிரதமர் மோடி
    X

    பழங்குடியின சிறுவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசிய காட்சி.

    தேர்தல் பிரசாரத்திற்கு நடுவே பழங்குடியின சிறுவர்களை தேடிச்சென்று சந்தித்த பிரதமர் மோடி

    • பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாமல் இருந்தாலும் பழங்குடியின சிறுவர்கள் பெரிய கனவுகளை கண்டு என்னை உத்வேகப்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடி கூறினார்.
    • பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பிரசாரங்களில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத்தில் வருகிற 1-ந்தேதி முதற்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    பிரதமர் மோடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று நேத்ராங்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    முன்னதாக அவர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அவி (வயது 14), ஜெய் (11) ஆகிய சகோதரர்களை நேரில் சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் தாய், தந்தையின்றி தனித்து வளர்ந்து வருகின்றனர்.

    இவர்களது பெற்றோர் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தனர். அன்றிலிருந்து அவி, ஜெய் ஆகியோர் ஒருவரை ஒருவர் கவனித்து வருகின்றனர். பெற்றோரை இழந்த நிலையில் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    வறுமையில் பல கஷ்டங்கள் வந்தாலும் கல்வியை விடக்கூடாது என்ற உறுதியில் சகோதரர்கள் இருவரும் வேலைகளுக்கு இடையே பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அவி 9-ம் வகுப்பும், ஜெய் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த பிரதமர் மோடி நேற்று தனது சுற்றுப்பயணத்தின் போது சிறுவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறுவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவி, நான் என்ஜினீயராக வேண்டும் என கூறி உள்ளார். ஜெய், நான் மாவட்ட கலெக்டராக விரும்புவதாக கூறி உள்ளார்.

    மாணவர்கள் இருவரையும் பாராட்டிய பிரதமர் மோடி, அரசு சார்பில் அவர்களது வீட்டில் டி.வி., கம்ப்யூட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். மேலும் அவர்களது படிப்பு செலவை ஏற்பதாகவும் உறுதி அளித்தார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தான் சந்தித்து பேசிய பழங்குடியின சிறுவர்களை குறிப்பிட்டு பேசினார். பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாமல் இருந்தாலும் இந்த சிறுவர்கள் பெரிய கனவுகளை கண்டு என்னை உத்வேகப்படுத்துகிறார்கள் என்றார்.

    பேரணியில் 2 சிறுவர்களை பற்றி பிரதமர் பேசிய வீடியோவை டுவிட் செய்த குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், 'பிரதமர் பேசிய அவி மற்றும் ஜெய் என்ற 2 குழந்தைகளின் போராட்டத்தின் மனதை தொடும் கதையை கேளுங்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அதே நேரம் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பிரசாரங்களில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×