search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்யப்பட்ட வழக்கு: கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவு
    X

    சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்யப்பட்ட வழக்கு: கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவு

    • சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகப் புகார் எழுந்தது.
    • சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5-ந் தேதி விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா 2017-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    குற்றச்சாட்டை முன்வைத்த ரூபா அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    இந்த வழக்கில், பெங்களூரு ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11-ந்தேதி சசிகலா, இளவரசி ஆஜராகி, தற்போது, ஜாமினில் உள்ளனர். இதனிடையே சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களுக்கு சிறப்பு சொகுசு வசதி வழங்கியதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    மனுவில், "பரப்பன அக்ரஹாரா சிறையில் தனக்கு சிறப்பு சொகுசு வசதி அளிக்கப்படுவதாக ஐ.பி.எஸ். அதிகாரி டி.ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

    அதன்பிறகு, அரசு உத்தரவுப்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, 2017 அக்டோபர் 21-ந் தேதி அளித்த அறிக்கையை, 2018 பிப்ரவரி 26-ந் தேதி மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை." என கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Next Story
    ×