search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குவியும் புகார்கள்- ஒரு நபர் குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவு
    X

    பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குவியும் புகார்கள்- ஒரு நபர் குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

    • பூஜா இந்த பணிக்கு தேர்வானதிலும், சர்ச்சைகள் எழுந்துள்ளது.
    • பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.

    இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். மேலும் கூடுதல் கலெக்டர் அஜய்மோர் இல்லாத போது அவரது அறையின் முன் அறையை பூஜா ஆக்கிரமித்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. இவர் மீதான புகார்களை தொடர்ந்து மாநில தலைமை செயலாளருக்கு புனே மாவட்ட கலெக்டர் சுகாஸ் திவாசே கடிதம் அனுப்பினார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே பூஜா இந்த பணிக்கு தேர்வானதிலும், சர்ச்சைகள் எழுந்துள்ளது. தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தாராம். ஆனால் அந்த குறைபாடுகளை உறதி படுத்த கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மேலும் மருத்துவ சோதனைக்கான சம்மன்களை 5 முறை பெற்றுக்கொள்ள மறுத்த அவர், 6-வது சம்மனை ஏற்று பாதி சோதனையில் மட்டும் கலந்து கொண்டதாகவும், பார்வை இழப்பை மதிப்பிடுவதற்கான சோதனையில் அவர் பங்கேற்கவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளது.

    மேலும் சிவில் சர்விஸ் தேர்வு முகமையில் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் இருப்பதாக சமர்ப்பித்து, கிரீமிலேயரில் இல்லையென்பதற்கான சான்றிதழை பெற்று ஓ.பி.சி. பிரிவில் சலுகை பெறுவதற்கான சாதி சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் கூறப்படுகிறது.

    இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறாக பூஜாகேத்கர் மீது அடுக்கடுக்கான புகார்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில் அவரது பணியிட மாற்றம் தொடர்பாக புனே கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில் பூஜாகேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா தலைமை செயலாளருக்கு சிவசேனா எம்.பி. மிலிந்த் தியோரா கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தகுதி மற்றும் நெறிமுறைகள் இல்லாதவர்கள் முக்கியமான பொதுப்பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது.

    Next Story
    ×