என் மலர்
இந்தியா
கேரளாவில் 2-ந்தேதி வரை கனமழை- 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மழையின் காரணமாக நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல் நலனில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
திருவனந்தபுரம்:
அரபிக்கடல் கொங்கன்-கோவா கடற்கரை மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அரபிக்கடலில் கேரள கடற்கரையை ஓட்டிய மேற்கு திசையில் இருந்து காற்று வேகமாக வீசி வருகிறது. வருகிற 2-ந்தேதி வரை கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆலப்புழா, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாவும், மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்க ளுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்ப ட்டுள்ளது.
இந்த ஆண்டு 122 நாள் பருவமழைக்கான காலம் முடிவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கேரளாவில் மழை நீடித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல் நலனில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் சிறு அறிகுறிகள் தோன்றினாலும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய ஆலப்புழாவின் குட்டநாடு பகுதியில் 3 நடமாடும் மிதக்கும் மருந்தகங்கள் மற்றும் நீர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.