என் மலர்
புதுச்சேரி

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்- புதுச்சேரி போக்சோ கோர்ட் தீர்ப்பு

- புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் விசாரணை செய்தனர்.
- வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி ராமன் (வயது31) விவசாயி. இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 2019-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
அதன் பிறகு மணப்பெண்ணை ஜானகி ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் விசாரணை செய்தனர்.
அதில், புகார் அளித்த பெண் 16 வயது சிறுமி என்பதும், குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.
அதன்பேரில் ஜானகி ராமன், அவரது தாய், தந்தை, சிறுமியின் தாய், தந்தை மற்றும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த உறவினர் பெண் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, ஜானகி ராமனுக்கு போக்சோ பிரிவில் 20 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும், திருமணம் நடத்தி வைத்த இருவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஆகியோருக்கு குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் தலா, 2 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.